

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் திடீர், திடீரென பறக்கும் நுரைப்படலத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கும் மாசடைந்த நீரில் இருந்து இந்த நுரைப்படலம் உருவாகிறது.
ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை மாநகரம் வழியாக விழுப்புரம் மாவட்டம் வரை செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய், சுமார் 420 கி.மீ. நீளம் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழக – ஆந்திர மாநிலங்களிடையே நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான கால்வாய் இது. ஆனால் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் நாற்றம் மிகுந்த சாக்கடை நீர் ஓடும் கால்வாயாக மாசுபட்டு கிடக்கிறது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலை அருகே பக்கிங்ஹாம் கால்வாயுடன் ஒரு பாதாள வாய்க்கால் சேருகிறது. வாலாஜா சாலையை ஒட்டி மேற்கிலிருந்து ஓடி வரும் இந்த வாய்க்காலில் ரசாயனப் பொருள்கள் கலந்த நீர் வருகிறது. பக்கிங்ஹாம் கால்வாயில் அந்த வாய்க்கால் சேருமிடத்தில் நீரில் கலந்துள்ள ரசாயனப் பொருள்களால் பெருமளவு நுரை உண்டாகிறது.
அங்கு அதிக அளவில் சேரும் நுரை பின்னர் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வாலாஜா சாலை பகுதியில் பரவுகிறது. அவற்றைப் பார்ப்பதற்கு ஏதோ பெரிய பனிக்கட்டிகள் காற்றில் பறந்து வருவதைப் போல தெரிகின்றன. வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு எதிரே பெரிய அளவிலான ஏதோ ஒரு வெள்ளை நிறப் பொருள் திடீரென பறந்து வருவதைப் பார்த்து தடுமாறிப் போகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உருவாகிறது.
வாரத்தில் 2, 3 நாள்களுக்கு இதுபோல் நுரை கிளம்புவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகிறார்.
ரசாயனப் பொருள்கள் கலந்த நீர் வாய்க்காலில் எந்த இடத்தில் சேருகிறது, அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றி தெரியவில்லை.
இது குறித்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் கூறியதாவது:
பக்கிங்ஹாம் கால்வாய் எப்போதோ மாசடைந்துவிட்டது. அந்தக் கால்வாயை மாசடையச் செய்யும் பல காரணிகள் உள்ளன. தற்போது வாலாஜா சாலை அருகே ரசாயனம் கலந்த நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் கலப்பது என்பது நம் கண்ணுக்குத் தெரியும் வெளிப்படையான நிகழ்வு.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து நிறுத்தி, மக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகள் தங்களுக்கான கடமையைச் செய்யத் தவறிவிட்டன. அதன் விளைவாகத்தான் ரசாயனம் கலந்த நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் கலப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்றார்.