இரண்டு ஆசிரியர்.. ஒரே ஒரு மாணவி..!- ஒரு விநோதப் பள்ளி

இரண்டு ஆசிரியர்.. ஒரே ஒரு மாணவி..!- ஒரு விநோதப் பள்ளி
Updated on
2 min read

பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று அலறுவதைத் தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கொரு பள்ளியில், ‘ஆசிரியரெல்லாம் இருக்காங் கப்பா.. மாணவர்கள் தான் வரமாட்டேங்கிறாங்க.’ என்று புலம்பல் கேட்கிறது. இந்தப் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்றே ஒன்று!

அனைத்து வசதிகளும் அம்சமாய் அமைந்த நாகப் பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத்தான் இந்த ஒற்றை மாணவரை பெற்ற பெருமை.

அனைத்தும் மகாலெட்சுமி

விஷயத்தைக் கேள்விப்பட்டு, அந்தப் பள்ளி செயல் படுவதை நேரில் பார்ப்பதற்காக காலையிலேயே அங்கு இருந்தோம். சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகாலெட்சுமி. பேருக்குத்தான் தலைமை ஆசிரியர். ஆனால், ‘கேட்’ திறப்பதிலிருந்து வகுப்பறையை பெருக்குவது வரை எல்லாமே இங்கு மகாலெட்சுமிதான்.

பள்ளியின் கதவைத் திறந்து உள்ளே வந்தவர், ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு சற்று நேரம் வெளிக்காற்றை சுவாசித்து புத்துணர்வு பெறுகிறார். அதே வேகத்தில் வகுப்பறையை சுத்தம் செய்து, கரும்பலகையில் தேதி மாற்றுகிறார். அடுத்ததாக, சற்று நேரத்தில் அங்கு வரப்போகும் மரியாதைக்குரிய அந்த மாணவிக்காக தரையில் கோரைப் பாயை விரிக்கிறார். வருகைப் பதிவேட்டைத் திறந்து கையெழுத்துப் போட்டுவிட்டு வியர்வையை துடைத்தபடி, வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார் மகாலெட்சுமி. ஒருவழியாக ஒன்பதரை மணிக்கு, ஒய்யார நடைபோட்டபடி அங்கு வந்து சேர்கிறார் அந்தப் பள்ளியின் ஒற்றை மாணவியான இரண்டாம் வகுப்பு படிக்கும் மகா. அவளை வாஞ்சையோடு வரவேற்று பாயில் அமரவைக்கும் மகாலெட்சுமி, அவளருகில் தானும் அமர்ந்து பாடத்தைத் தொடங்குகிறார்.

ஏன் இந்த நிலைமை?

“சுதந்திரத்துக்கு முன்பு திண்ணைப் பள்ளியாக ஆரம் பிக்கப்பட்ட பள்ளி இது. 1962-ல் அரசுப் பள்ளியாக அங்கீ கரிக்கப்பட்டது. ஆரம்பத்துல, இங்குள்ள மக்கள் இந்தப் பள்ளிக்குத்தான் தங்களது பிள்ளைகளை படிக்க அனுப்பினாங்க. நாளடைவில், உயர் நிலைப் பள்ளியுடன் இணைந்து இன்னொரு தொடக்கப் பள்ளி யும் இன்னும் சில தனியார் பள்ளிகளும் இங்கே தலை யெடுத்த பிறகுதான் இங்கே மாணவர் சேர்க்கை குறைஞ்சிருச்சு.’’ என்கிறார்கள் வடகரை மக்கள்.

கடந்த ஆண்டு இங்கு மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருந்தது. இதில், 12 பேர் ஐந்தாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துவிட்டதால் மாணவர் எண்ணிக்கை மூன்றாக குறைந்தது. புதிய வரவுகளும் இல்லாமல் போன நிலையில், அந்த மூன்று பேரிலும் இருவர் உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்த மற்றொரு தொடக்கப்பள்ளிக்குச் சென்று விட்டனர். எஞ்சி நின்றது மாணவி மகா மட்டுமே.

புதிய மாணவர்களை சேர்ப்போம்

தலைமை ஆசிரியர் மகாலெட்சுமி மகாயை கண்ணுக்கு இமையாய் பாதுகாக்கிறார் என்பது அவரது நடவடிக்கைகளை பார்த்தாலே தெரிந்தது. இன்னொரு விநோதம் என்ன தெரியுமா? இந்தப் பள்ளியில் இன்னொரு ஆசிரியரும் பணியில் இருக்கிறார். நாம் சென்ற தினத்தில் அவர் விடுப்பாம்! பள்ளி குறித்து பேச ஆரம்பித்ததுமே பதற்றமாகிப் போனார் மகாலெட்சுமி.

“இதப்பத்தி நான் எதுவும் சொல்லமுடியாதுங்க. எதுவா இருந்தாலும் மேலதிகாரிங்ககிட்ட கேட்டுக்குங்க’’ என்றபடி மறுபடியும் வியர்த்துப் போனார் மகாலெட்சுமி.

செம்பனார் கோயில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வராகனோ, “ஐந்தாம் வகுப்பு படித்துத் தேர்வான மாண வர்கள் உயர் கல்விக்காக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டதால் இப்படி எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக அந்தப் பள்ளியில் புதிய மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்கிறார்.

நாம் அங்கிருந்து கிளம்புகையில், உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சமைக்கப்பட்ட சத்துணவானது மகாக்காக எடுப்புச் சாப்பாடு கணக்காய் வந்து கொண்டிருந்தது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in