Published : 20 Jun 2017 09:47 AM
Last Updated : 20 Jun 2017 09:47 AM

நாய்களுக்குப் பிடித்தமான நல்லவரு..

நாகர்கோவிலின் தவிர்க்க முடியாத அடையாளம் மணி மேடை. கம்பீரமாய் நிற்கும் இந்த மணிக்கூண்டின் முன்பு தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையாய் சிரிக்கிறார். மணிமேடையின் இன்னொரு அடையாளமாக வலம் வருகிறார் ‘சைக்கிள் ராம்.’

வாஞ்சையோடு பேசும் ராம்

காலைநேரம் - மணிமேடையைச் சுற்றி அமர்ந்தபடி அன்றைய தின சரிகளை வேகமாக பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் பத்திரிகை பையன்கள். அந்த நேரத்தில்.. சைக்கிளின் இருபுறமும் பைகளை தொங்கவிட்டபடி, மணி அடித்து வேகமாக வருகிறார் 62 வயதான ராம். அவருக்காகவே காத்துக் கிடந்த தெருநாய்கள் அவரது சைக் கிளை வட்டமடித்துக் கொண்டு வாலாட்டுகின்றன.

சைக்கிளை விட்டு இறங்குபவர், அந்த ஐந்தறிவு ஜீவன்களை பெயர் சொல்லி அழைத்து வாஞ்சையோடு பேசுகிறார். பதிலுக்கு வாலாட்டும் அவைகளுக்கு, தான் எடுத்து வந்திருந்த கோழிக்கால், பிஸ் கட்டுகளை போட்டுவிட்டு, அடுத்த பகுதிக்கு விரைகிறார் ராம். அங் கேயும் இதேபோல் வாஞ்சைக் காட்சிகள் அரங்கேறுகின்றன. இப்படியே அடுத்தடுத்த தெருக் களை நோக்கி நகர்கிறது ராமின் சைக்கிள்.

தினமும் 6 மணி நேரம்

‘‘இருபது இருபத்தஞ்சு வருசமா கூலி வேலைதான் செய் யுறேன். சந்தையில மீன் வெட்டிக் குடுக்குறது சுமை தூக்குறது, கோழிக் கடையில கோழி வெட்டு றதுன்னு கிடைக்கிற வேலைய பாத்துக்குவேன். பெருசா சொத்துப் பத்து சேர்த்து வைக்காட்டியும் கஷ்டப்படாம குடும்பத்தோட கஞ்சிகுடிக்க முடியுது. என் குடும் பத்துக்குப் போக மிஞ்சுறதுல நன்றியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் உதவுறேன்.’’ ஜீவ காருண்யம் சொல்கிறார் ராம்.

தெருநாய்களுக்கு உணவு கொடுக்க தினமும் 6 மணி நேரம் சைக்கிள் மிதிக்கும் ராம், “மனுசங்ககூட சிலநேரங்கள்ல நன்றி மறந்துருவாங்க. ஆனா, நாய்களிடம் பாசத்தக் காட்டிப் பாருங்க பதிலுக்கு ஒண்ணுக்கு ரெண்டு மடங்கா அது காட்டும். அந்தப் பாசத்துல கட்டுண்டுதான் தினமும் இதுகளுக்காக மணிக் கணக்கா சைக்கிள் மிதிக்கிறேன். எந்த வேலைக்குப் போனாலும் ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பாதிச்சுட்டேன்னா போதும்; நாய்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு சைக்கிளை கெளப்பீருவேன்.

சுடுகாடு சொல்லும் பாடம்

தினமும் 3 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்ல ஐம்பதும் கோழிக் கடையில கோழிக்காலும் வாங் கிக்குவேன் முன்ன இலவச மாவே கெடைச்ச கோழிக்காலுக்கு இப்ப கிராக்கி வந்துருச்சு; காசு குடுத்துத்தான் வாங்க வேண்டி இருக்கு. கோழிக்காலை நல்லா கழுவி வெந்நீர்ல வேகவைச்சுத் தான் நாய்களுக்குப் போடுவேன். நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் பக்கத்துலருந்து ஆரம்பிச்சு பீச் ரோடு வழியா அஞ்சாறு இடங்கள்ல நாய்களுக்கு தீனி குடுத்துட்டு வடசேரி வழியா மணிமேடை வருவேன். அப்புறம் இங்கருந்து ஆரம்பிச்சு ஒழுகினசேரி சுடுகாட்டுல போயி முடிப்பேன்.’’ என்றவர் தொடர்ந்தும் பேசினார்.

“பிறக்கிறப்ப வெறும் கையோடு பிறக்கிற மனுசன் போகும்போதும் எதையும் கொண்டுபோறதில்ல. தினமும் சுடுகாட்டுலருந்து திரும் புறப்ப இதை நான் திரும்பத் திரும்ப நினைச்சுப் பாத்துப்பேன். கடந்த நாப்பது வருசமா தினமும் தோராயமா 200 நாய்களுக்கு இப்படி பசியாத்திட்டு வர்றேன். இதுகளுக்கும் எனக்கும் செல வழிச்சது போக மிச்சம் மீதி இருந்தா பத்து, இருபதுன்னு சேர்த்து வைப்பேன். அதை வெச்சு, வருசத்துல ஒருமுறை இதுகளுக்கு சிக்கன் பொரிப்பு வாங்கிப் போடுவேன்..’’ சொல்லி விட்டு ராம் சைக்கிளை மிதிக்க, அந்த வாயில்லா ஜீவன்கள் வாலாட்டி அவருக்கு நன்றி சொல்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x