Last Updated : 12 Jun, 2017 02:41 PM

 

Published : 12 Jun 2017 02:41 PM
Last Updated : 12 Jun 2017 02:41 PM

ஆளை விழுங்கக் காத்திருக்கிறதா பிளாஸ்டிக் அரிசி எனும் பெரும்பூதம்?

தொலைக்காட்சி செய்திகள் ''ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசியைக்கொண்டு கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்'' என்று ஏதோ சொல்லிக்கொண்டிருக்க திடீரென்று வியந்தது என் மனம். என்ன இது வினோதம் பிளாஸ்டிக் அரிசியால் கிரிக்கெட் விளையாட்டா? என்று ஒருகணம் புரியாமல் தவித்தது.

அப்புறம் ஒருமாதிரியாய் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு செய்தியைப் பார்த்தால், பிளாஸ்டிக் அரிசியை பந்து போல உருட்டி அதை வைத்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள் சிறுவர்கள். ஓ அப்ப சரிதான்... பிளாஸ்டிக் அரிசியால் பந்து விளையாட முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மூட்டைமூட்டையாக....

உண்மையில் இப்போதாவது மனம் சமாதானமாகியிருக்கவேண்டும். ஆனால் அடங்கவில்லை... இதன்பிறகுதான் அது அதிகம் பொங்க ஆரம்பித்தது. அந்தப் பையன்களின் கையில் எப்படி வந்தது பிளாஸ்டிக் அரிசி.... அப்புறம் அதைத் தொடர்ந்து.... சில ஊடகங்களில் பார்த்தால் ஹைதராபாத்தில் மூட்டைமூட்டையாக பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்ததாக உறுதிப்படுத்தாமல் வந்த பகீர் செய்தியையும் பார்க்க முடிந்தது.

என்ன நடக்கிறது நம் நாட்டில்? மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் அரிசி... கேட்பதற்கே அதிர்ச்சியாகவும் என்றென்றைக்கும் சமாதானப்படுத்திவிட முடியாததாகவும் உள்ள செய்தியாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை கப்பலில் ஏற்றி பல்லாயிரம் உயிர்களைக் காக்க பேருதவியாய் இருந்த ஒரு நாட்டிற்கு இன்று வந்து சேர்ந்திருப்பது பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளா?

அப்படியே மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் அரிசி என்றால் அந்த பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை ஊடகங்கள் காட்ட வேண்டாமா? வெறும் சொற்களால் தொடுக்கப்படும் செய்தி மாலை பொய் என்றால் அது கொஞ்ச நேரத்தில் உதிர்ந்துவிடாதா? செய்தி உண்மையா பொய்யா என்று உறுதிப்படுத்திக்கொண்டு தெரிவிக்கலாமே. இப்படி உறுதியற்ற செய்திகளால் அச்சம் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய அளவில் மத்திய அரசு என்ன செய்தது?

தமிழக அரசின் எச்சரிக்கை

ஜார்க்கண்டில் தொடங்கி ஆந்திரா வரை சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வழியாகவே வந்த இந்த வதந்தி தற்போது தமிழகத்தில் நிலை கொண்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசி கற்பனை அரிசியா? கதைவிடும் அரிசியா? என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பரிசோதனைப் பணிகளை 300க்கும் மேற்பட்ட இடங்களில் முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் அங்கு வந்த வரை பரிசோதித்த வரை அப்படியெதுவும் இல்லை. மேலும் தமிழக அரசு பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு சிறந்த முறையில் ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் பிளாஸ்டிக் அரிசி என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரிசிக்கு மாற்றாக

அரிசியைப் பற்றித்தானே வதந்தி. மற்ற தானியங்கள் பற்றி இல்லையே எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அந்த அரிசியும் இப்போதெல்லாம் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். டாக்டரே சொல்லிவிட்டார் என மக்கள் கோதுமையும் தானியங்களை நோக்கியும் அரிசிக்கு மாற்றாக நகரத் தொடங்கிவிட்டார்கள் என்று கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொள்ளலாமா? அதெப்படி முடியும்.

அரிசி நமது பாரம்பரிய உணவு. அரிசி எந்த தானியத்திற்கும் குறையாத சத்துக்களைக் கொண்டுள்ளது. 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவிலான கால்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். இதே அளவிலான சத்துக்கள்தான் கோதுமை, கம்பு போன்றவற்றில் உள்ளன. அப்படியிருக்கும்போது அரிசிதானே என எப்படி அலட்சியம் காட்ட முடியும் சரி இன்றை அரிசி நாளைக்கு கேழ்வரகு பிளாஸ்டிக் வராது என்று என்ன நிச்சயம்? கேள்வி வரத்தானே செய்கிறது.

கர்நாடகா

இந்த செய்தி ஒருபக்கம் வந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு செய்தி ''கர்நாடகாவில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை: விசாரணை நடத்த உணவுத்துறை உத்தரவு'' என்று. இதென்ன புதுசா கிளம்பின பூதம். இன்னும் என்ன பூதங்கள் உள்ளன. பிளாஸ்டிக் பூதங்கள். ஆளைவிழுங்க அவற்றை ஏவிவிட்டது யார்?

'சார் ஏன் சார் டென்ஷன் ஆகறீங்க... அதான் அமைச்சரே சொல்லிட்டாரே ''தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இல்லை''ன்னு அப்புறம் ஏன் சார் அலர்றீங்க... இருக்கற அரசியல் சதுரங்க ஆட்டத்துல நீங்க வேற.... காமெடி பண்ணிக்கிட்டு...' என்பதுதானே உங்கள் கேள்வி.

தவிர்க்கமுடியாத பதட்டம்

ஐயா மாண்புமிகு பொதுஜனம்... நீங்க என்னை தணிக்க நினைக்கறது புரியுது. எதையும் பாஸிட்டிவ்வா யோசிக்கணும்னு எப்பவும் ஜாலியா இருக்கணும் டென்ஷன் ஆகக்கூடாது என்று.

அப்படி இருக்கமுடியாதே. இது உயிராதாரம் சம்பந்தப்பட்டது ஆச்சே. உயிர் போனா வருமா? வருமுன் காப்போம்னு ஒரு முதுமொழி நம்மகிட்ட இருக்கு. அதன் வலிமை முதல்ல புரிஞ்சிக்கணும். எதுக்கும் பாதுகாப்பா இருக்கறது நல்லதுதானே....

''அதான் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்திட்டு வர்றாங்க... வேறென்ன பண்ண சொல்றீங்க...?'' அப்படின்னு மறுபடியும் நீங்க

கேக்க நினைக்கறது எனக்கு நல்லாவே கேட்குது. அதுக்காக எல்லாத்தையும் அரசாங்கமே பாத்துக்கும்னு விட்டுடலாம்னு நினைக்கறீங்களா.... கொஞ்சம் மார்க்கெட் பக்கம் போய் பாருங்க சார் ஜனங்க அல்லோலகல்லோல படறதை.

பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை

இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் துளசிங்கத்திடம் பேசினோம். அவர், ''தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே வணிகர்கள் சங்க லாரிகள் நிறைய செல்கின்றன. தென்னிந்திய மாநிலங்களுக்குள்ளாக அரிசி ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுகிறது. அதனால் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். ஆங்காங்கே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக வரும் செய்திகள் எல்லாமே வதந்திதான். பிளாஸ்டிக் அரிசி என்பதே பொய்யான ஒன்று, பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு மிக்க ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். நம்மை யாரும் ஏமாற்றிவிடமுடியாது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையையே ஆரம்பமாகக் கொள்ளலாம். பல கோடி மக்களின் உயிராதாரம் என்ற வகையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தண்டனைகளிலிருந்து தப்பமுடியாத வகையில் அரசை வலியுறுத்துவதும் தீவிர நுகர்வோர் இயக்கங்களை உருவாக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் தேவை முன்னிட்டு சந்தைப் பெருக்கம் காரணமாக பல்வேறு பொருட்களிலும் கலப்படம் மிகுந்து வருகிறது. இந்நிலையில் கலப்படம் செய்வது குறித்து வந்த அரசுக்கு வந்தப் புகார்கள் எத்தனை? அதில் எத்தனை விசாரிக்கப்பட்டன. அதில் உண்மை கண்டறியப்பட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் எத்தனை என்பதைக் கண்டறியும் வகையில் நுகர்வோர் இயக்கங்கள் ஆர்வமாக செயல்பட வேண்டிய அவசர அவசியமே இன்றைய தேவை.

கலப்படம் செய்வோர் மீது ஈடுபட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்ககைள் எத்தனைபேர் மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் பாய்ந்தன என்பதைப் பற்றியும் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படப்பட வேண்டும்.

மேலும் மக்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு அளிக்க வேண்டிய தண்டனைகள் மென்மையாக இருந்தால் இந்திய தண்டனைச் சட்டத்தில் இதுகுறித்த திருத்தங்கள் செய்ய வலியுறுத்தும் பணிகளில் நுகர்வோர் இயக்கங்கள் ஈடுபட வேண்டும்.

அதுமட்டுமின்றி எவ்வகையான ஆதாரமுமின்றி பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களும் வலைதளங்களும் வெற்றுப் பரபரப்பையும் வீண் வதந்ததியையும் ஆதாரமற்ற வீடியோக்களையும் பதிவிடுவதன் மூலம் பாதிப்புகளை உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x