

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ள ட்விட்டர் சமூக வலைதளத்தில், ஒரே நாளில் 950-க்கும் மேற்பட்டோர் ஃபாலோயர்களாக இணைந்தனர். ஆனால், பெயர்க்குழப்பம் காரணமாக, அவரது பெயரில் ஏற்கெனவே இருக்கும் வலை தளத்தில் 1,700 பேர் வரை ஃபாலோயர்களாக இணைந்தனர்.
ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை காலை கணக்கு தொடங்கினார். >mkstalin என்ற பெயரில், >mkstalin.in என்ற இணைய தள முகவரியுடன் கூடிய ட்விட்டர் பக்கம் தொடர்பான அறிவிப்பை திமுக நிர்வாகிகள் வெளியிட்டனர். இதுகுறித்து உடனடியாக ஊடகங்களில் செய்திகளும் வெளியானதால் திமுக வினரும், பொதுமக்களில் பலரும் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் இணைந்தனர்.
சனிக்கிழமை மாலை 6 மணி வரை, ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 95 பேர் மட்டுமே பாலோயர்களாக இணைந்திருந்தனர். ஆனால், mkstalin_dmk என்று ஸ்டாலின் படத்துடன் கூடிய மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் 1,700 பேர் வரை ஃபாலோயர்களாக இணைந்திருந்தனர். இந்த வலைப்பக்கத்தில் mkstalin.net என்ற ஸ்டாலினின் பழைய இணைய தள முகவரி உள்ளது.
இந்தப் பெயர்க் குழப்பம் குறித்து, ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தை பராமரிக்கும் திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள், திமுகவினருக்கு ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்க முகவரியை அனுப்பி வைத்து, குழப் பத்தைத் தீர்த்துள்ளனர். இதை யடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் 950-க்கும் மேற்பட்டோர் ஸ்டாலினுக்கு ஃபாலோயர்களாக தங்களை பதிவு செய்துகொண்டனர்.
கருணாநிதிக்கு 20 ஆயிரம் ஃபாலோயர்கள்
திமுக தலைவர் கருணாநிதி, 2 ஆண்டுகளுக்கு முன்பே 'கலைஞர் கருணாநிதி' (>KalaignarKarunanidhi) என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கி, அதில் திமுகவினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை அறிந்து வருகிறார். அதில் வரும் ட்வீட்களை கருணாநிதியே பதிவு செய்கிறார். கருணாநிதிக்கு 20 ஆயிரம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர் ட்விட்டரில் யாரையும் ஃபாலோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.