

தெற்கு ரயில்வேயில் தென் மாவட்ட ரயில்கள்தான் அதிக வருவாய் ஈட்டித் தருகின்றன. இருந்தாலும், தென்மாவட் டங்களுக்கு குறைவான ரயில்களே இயக்கப் படுகின்றன. இரட்டை ரயில் பாதை இல்லாததே இதற்குக் காரணம். எனவே, இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாக கோரி வந்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு விழுப்புரம் இடையேயும் விழுப்புரம் திண்டுக்கல் இடையேயும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே இரண்டு கட்டமாக தொடங்கி மேற்கொண்டு வருகிறது. ரயில்வே வாரியம் போதிய நிதி ஒதுக்காததால், இரட்டைப் பாதை அமைக்கும் பணி தாமதமாகிறது என்று புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: செங்கல்பட்டு விழுப்புரம் இடையே 103 கி.மீ. தொலைவுக்கு ரூ.700 கோடி செலவில் இரட்டைப் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதுவரை 75 கி.மீ. இரட்டைப் பாதை அமைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 28 கி.மீ. தொலைவில் வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடித்து, ஜூன் முதல் ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
விழுப்புரம் திண்டுக்கல் இடையே (273 கி.மீ.) ரூ.1,250 கோடி செலவில் இரட்டைப் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதில், கல்லக்குடி பழங்கானத்தம் வாலாடி (25 கி.மீ.) இடையே இரட்டைப் பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. வாலடி அரியலூர் வரை (24 கி.மீ.) வரும் மார்ச் மாதத்துக்குள் இரட்டைப் பாதை அமைக்கப்பட்டுவிடும்.
அரியலூர் திண்டுக்கல் இடையே இரட்டைப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைப் பெறுவதிலும் நிலம் கையகப்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதமே திட்டப் பணிகள் தாமதத்துக்கு காரணம்.
மதுரை நெல்லை கன்னியா குமரி இடையே உள்ள 240 கி.மீ. தொலைவுக்கு இரட்டைப் பாதை அமைப்பதற்கான சர்வே முடிக்கப்பட்டுவிட்டது. இப்பாதை யில் ரூ.1,900 கோடியில் இரட்டைப் பாதை அமைப்பதற்கான கருத்துருவை கடந்த ஆண்டு ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.