

தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளில் பலராலும் நேசிக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள் சில தினங்களாக மிகப்பெரும் சோகத்தில் சோர்ந்து கிடக்கிறது. தமிழக அரசு அந்த யானைக்கு மேலும் ஒரு பாகனை நியமித்து உத்தரவிட்டதே அதன் சோகத்துக்குக் காரணம்.
ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் ஸ்ரீரங்கம்வாசிகளின் மிகவும் பாசத்துக்குரிய சிநேகிதி. அதேபோல தமிழக முதல்வரின் அன்புக்குரிய யானையும்கூட. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ஜெயலலிதா வருகை தரும் ஒவ்வொரு முறையும் அதற்குப் பிடித்தமான கரும்புகளை வாங்கி வந்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.
ஸ்ரீரங்கம் கோயிலுடன் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள யானை ஆண்டாள் அதன் பாகன் ஸ்ரீதர் பதவி விலகப்போவதாக அறிவித்ததைக் கேட்டது முதல் சோகமாகிவிட்டது.
“திருச்சியைச் சேர்ந்த பக்தர் அண்ணாமலை என்பவரால் கோவையிலிருந்து 8 வயது குட்டியாக வாங்கி வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக தரப்பட்டது ஆண்டாள். அந்த யானையை தேடிப்பிடித்து வாங்கி வந்தவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். ஆண்டாள் ஸ்ரீரங்கம் வந்ததிலிருந்து அதற்குப் பாகனாக ஸ்ரீதரையே நியமித்தது அறநிலையத்துறை.
“தற்போது 54 வயதாகும் பாகன் ஸ்ரீதர் ஆண்டாளுடன் தனது வாழ்வின் பெரும் பகுதியை கழித்துவிட்டார். ஆண்டாளின் மிகவும் நேசத்திற்குரிய ஸ்ரீதர், அதை தான் பெறாத பிள்ளையானாலும் பெற்ற குழந்தைகளைவிட அதிகமாகவே கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். ஸ்ரீதர் சொல்லும் வார்த்தைகளை மீறி ஆண்டாள் எதுவுமே செய்யாது. அதே சமயம் யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் தொல்லை கொடுத்ததில்லை ஆண்டாள். அதற்குக் காரணம் பாகன் ஸ்ரீதர் அதை பழக்கிய விதம்” என்கிறார்கள் கோயில் பணியாளர்கள்.
ஆனால், ஆண்டாள்- ஸ்ரீதருக்கிடையேயான அந்த பாசப்பிணைப்புக்கு சில நாட்களுக்கு முன்பு உதவிப் பாகன் நியமனம் என்ற வடிவில் வந்தது சோதனை. ராஜேஷ் என்பவரை உதவிப் பாகனாக நியமனம் செய்து தமிழக அறநிலையத்துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதற்கு தற்போதைய பாகன் ஸ்ரீதர், “யானை ஒரு மிகப் பெரிய விலங்கு. அதற்கு 2 பாகன்களை நியமிப்பதால் அது யாருடைய சொல்லைக் கேட்பது என்பதில் குழப்பமேற்படும். அதனால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். என்னிடம் ஒருவித பாஷையில் பேசிப் பழகிவிட்ட ஆண்டாள் இன்னொரு பாகன் வந்த பிறகு அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் போகலாம். அதனால் அவருக்கும் ஆண்டாளுக்கும் எனக்குமான உறவுகளில் சிக்கல் உருவாகும். ஆண்டாள் இருக்கும் வரை நான் அதனுடன் இருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்கிறேன். வேறு யானை வரும்போது வேண்டுமானால் பாகனை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆண்டாளை உதவிப்பாகனே கவனித்துக் கொள்ளட்டும். நான் விலகிக் கொள்கிறேன்” என சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர்.
“இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கோயில் செயல் அலுவலர் கல்யாணி, ஸ்ரீதரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார் பாகன் ஸ்ரீதர். பிறகு வெளியே வந்த பாகன், ஆண்டாளிடம், “நான் உன்னை விட்டுப் போகிறேன். நீ இங்கேயே இருந்து கொள்கிறாயா?” என அதற்குரிய பாஷையில் கேட்க அதை மறுக்கும் விதமாக ஆண்டாள் தலையை பலமாக ஆட்டி கண்ணீர் விட்டு அழுதது. அந்தக் காட்சியைக் கண்ட அறநிலையத்துறைப் பணியாளர்களே கண் கலங்கினர்” என்கிறார் அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த கோயில் ஊழியர் ஒருவர்.
தனது பெயர் வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் பேசிய கோயில் உயரதிகாரி ஒருவர், “27 ஆண்டுகள் ஒருத்தருடன் பழகிவிட்டதால் யானை அவர் மீது அதிக பாசம் காட்டுகிறது. உதவி யானைப்பாகனை நியமித்தது அரசின் முடிவு. தமிழகத்தில் பல கோயில்களில் உதவிப் பாகனை நியமனம் செய்து வருகிறார்கள். அதன் ஒரு கட்டம்தான் இந்தக் கோயிலில் உதவிப் பாகன் நியமனம். ஸ்ரீதர் தலைமைப் பாகனாக தொடரலாம். அவர் பணியை விட்டு விலகினால் வேறொருவரை தலைமைப் பாகனாக நியமிக்கும் ஏற்பாடுகளை அரசு செய்யும். கொஞ்ச நாட்களில் நிலைமை சரியாகிவிடும்” என்றார்.