Last Updated : 27 Dec, 2013 07:18 PM

 

Published : 27 Dec 2013 07:18 PM
Last Updated : 27 Dec 2013 07:18 PM

நெல்லை: மங்கள மஞ்சள்; இனிக்கும் கரும்பு அறுவடைக்கு தயார்

திருநெல்வேலி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை கொண்டாட்ட ங்களை மங்களகரமாக்கும் மஞ்சள், இனிக்க வைக்கும் கரும்பு ஆகியவை, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

தைப்பொங்கல்

ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகை விற்பனையைக் குறி வைத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், உள்ளூர் விவசாயிகள் கரும்பு, மஞ்சள் பயிர் சாகுபடி செய்கின்றனர். எனினும், இம்மாவட்டத் தேவையை இவை பூர்த்தி செய்ய இயலாது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் இவை பெருமளவு கொண்டு வரப்படுவது வழக்கம்.

ஈரோடு, கோவை, பொள்ளாச்சி பகுதிகளிருந்து மஞ்சள் குலையும், தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து கரும்பும், பெருமளவு மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, இங்கு சில்லறை விற்பனைக்கு கொண்டு வருவர். கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ. 30 வரை விற்பனை செய்யப்பட்டது. வரும் புத்தாண்டுக்குப் பின் கரும்புக் கட்டுகள் விற்பனைக்கு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்துள்ள கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது.

2,730 ஹெக்டேரில் கரும்பு

திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டாரங்களில் ஆங்காங்கே கரும்பு பயிரிடப்பட்டிரு க்கிறது. 2013-14-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில், 2,800 ஹெக்டேரில் கரும்பு பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, 2,730 ஹெக்டேர் வரை தற்போது கரும்பு பயிரிடப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், 2,732 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்ததாக வேளாண் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் மாவட்ட த்தில், திருநெல்வேலி, தென்காசி, கடையநல்லூர் வட்டார பகுதிகளில் குறைந்த அளவுக்கு மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது. உள்ளூர் தேவையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், 5 சென்ட், 10 சென்ட் என்று, குறைந்த அளவு மஞ்சள் செடிகள் சாகுபடி செய்துள்ளனர். மஞ்சளும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

மஞ்சள் சந்தை

திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.சவுந்தரராஜன் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விற்பனையைக் குறி வைத்துதான் விவசாயிகள் கரும்பு, மஞ்சள் பயிரிடுகிறார்கள். மாவட்டத்தில், 15 முதல் 25 ஏக்கர் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது. ஈரோடு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் மஞ்சள் பொங்கலுக்கு மட்டுமின்றி வேறு பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. அங்கெல்லாம் மஞ்சளை பவுடராக்கி சந்தைக்கு கொண்டு செல்லும் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் அவ்வாறு இல்லை.

பொங்கல் பண்டிக்கைக்காக குறைந்த அளவு விவசாயிகள் கரும்பை பயிரிடுகிறார்கள். சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் அளவுக்கு இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. தேனி உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து தான் இங்கு கரும்பு அதிகளவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றார் அவர்.

சூரிய படையல்

பொங்கல் பண்டிகையின் போது சூரிய படையலுக்குத் தேவைப்படும் முக்கிய பொருட்களில் மஞ்சள் இலைகளுடன் கூடிய மஞ்சள் கொத்து முக்கியமானது. மஞ்சள் கொத்து விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இங்கிருந்து பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய ஆலோசகர் சதிஷ்மன்னன் கூறுகையில், “மஞ்சள் அறுவடை செய்து, ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஏக்கருக்கு, 25 முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது. ஒரு குவிண்டால், ரூ.5,000 முதல் 8,000 வரை விலை போகிறது. எனவே, விவசாயிகள் மஞ்சளை குலையாக அறுவடை செய்யாமல், மஞ்சள் கிழங்காகத்தான் அறுவடை செய்வர். இதனால்தான், மஞ்சள் குலைகள் குறைவாக வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x