5 கேள்விகள் 5 பதில்கள்: நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நகரத்தவர்களுக்கே அதிகம்!

5 கேள்விகள் 5 பதில்கள்: நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நகரத்தவர்களுக்கே அதிகம்!
Updated on
2 min read

வறட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அரசும் விவசாயிகளும் மட்டுமல்ல. இந்தப் பூமியில் வசிக்கிற ஒவ்வொருவரும்தான் என்று கூறும் சுரேஷ், கோவையில் உள்ள ‘சவுத் இண்டியன் வங்கி’யில் மேலாளராகப் பணிபுரிபவர். வறண்ட தர்மபுரி மாவட்டத்தில் நாகாவதி நதியை மீட்கும் குழுவில் மனைவியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவருடன் பேசினேன்.

இந்த ஆர்வம் எப்படி வந்தது?

விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். சமூகப் பணி ஏதாவது செய்யலாமே என்று கருதியபோது, தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தில் ‘புவிதம்’ (புவி இதம்) என்ற பெயரில் இயங்குகிற மாற்றுப் பள்ளி ஒன்று என் கவனத்துக்கு வந்தது. காந்தியப் பொருளாதாரத்தின் தந்தையான ஜே.சி.குமரப்பாவின் வழிமுறையைப் பின்பற்றி, முழுக்க முழுக்கத் தற்சார்புடன் நடத்தப் படுகிற பள்ளி அது. அந்தப் பள்ளியை நடத்தும் காந்திய வாதியான மீனாட்சி உமேஷ், உ.பி.யைச் சேர்ந் தவர். வறண்ட பாறைகள் நிறைந்த மேட்டு நிலத்தை வாங்கி, அதை ஒரு வனம்போல மாற்றி யவர். அவரோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோதுதான், நதியை மீட்டெடுக்கும் ஆர்வம் வந்தது.

ஜீவநதிகளே அழிந்துகொண்டிருக்கும் தறுவாயில், அழிந்துபோன ஆற்றை மீட்டெடுக்க முடியுமா?

இந்தப் பள்ளியுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, காந்தியவாதியும் தண்ணீர் மனிதன் என்று போற்றப்படுபவருமான ராஜேந்திர சிங் பற்றி அறிந்துகொண்டோம். அவர் பணியாற்றிய ராஜஸ்தானின் ஹால்வார் என்ற ஊருக்கு நேரில் சென்று பார்த்தோம். அதே போல மழைநீர் சேகரிப்பால் தற்சார்பு கிராமமாக மாறிய மகாராஷ்டிராவின் ஹிதேரே பஜார் கிராமத்துக்கும் சென் றேன். அவ்வூரின் சராசரி மழையளவு வெறும் 400 மில்லி மீட்டர். அதோடு ஒப்பிடுகையில், நாம் வறட்சி மாவட்டம் என்று கருதும் தர்மபுரியில் இருமடங்கு மழை பொழிகிறது. அந்த நம்பிக்கையில்தான் செயலில் இறங்கினோம்.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு எப்படியிருக்கிறது?

ஒரு திட்டமோ, கனவோ எதுவாகிலும் உள்ளூர் மக்களுக்கு அதைப் புரியவைக்க வேண் டும். எனவே, இதுகுறித்த ஆவணப்படங்களை உருவாக்கி பள்ளி, கல்லூரிகளில் திரையிட்டோம். தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் பற்றிய ஆவணப் படத்தையும் தமிழில் மொழிமாற்றம் செய்து திரையிட்டோம். பாலைவனத்திலேயே இந்த மாதிரி செய்ய முடியும் என்றால், இங்கே ஏன் செய்ய முடியாது என்று மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. பள்ளி, கல்லூரிகள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை எங்களோடு அனுப்பினார்கள். இப்போது அப்பகுதியில் அடுக் கடுக்காகக் குட்டைகள் உருவாகி விட்டன.

குறுகிய காலத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

கைவசம் 100 நாள் வேலைத் திட்டம் இருக் கிறதே? ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணைக் குட்டைகள் அமைக்க 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைப் பயன்படுத்திக்கொள்வது என்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும். ஒரே ஆண்டில் பல லட்சம் பண்ணைக் குட்டைகள் உருவாகி விடும்.

நகரங்களுக்கெனத் திட்டம் இல்லையா?

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிராமத்தவர்களைக் காட்டிலும் நகரத்தவர்களுக்கே அதிகம் இருக்கிறது. பெரிய பெரிய சாலைகள், பெருந்தொழிற்சாலைகள் என்று நமது தேவைக்காகத்தான் இயற்கை வளங்களும், நீர்நிலைகளும் அதிகளவில் சூறையாடப்பட்டிருக்கின்றன என்ற புரிதல் நகரத்தவர்களுக்கு வேண்டும். கிராமத்தவர்கள் விவசாயம் என்ற பெயரில் மட்டும்தான் மண்வளத்தையும், நீர்வளத்தையும் அதீதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருக்கிற நீர்நிலைகளையேனும் காப்பது, கிராமங்களில் நடைபெறும் பணிகளில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்வது என்று நகரத்தவர்களும் ஆர்வம்காட்டினால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in