Last Updated : 16 Nov, 2013 05:06 PM

 

Published : 16 Nov 2013 05:06 PM
Last Updated : 16 Nov 2013 05:06 PM

போய்வாருங்கள் சச்சின்...

மேட்ச் முடிந்து எல்லா வீரர்களும் பெவிலியனை நோக்கி சச்சினின் பின்னால் நடக்க, ஒரு பக்கமாக தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு, கையில் ஸ்டம்புடன் சச்சினும் நடந்தார். பெவிலியனுக்குள் போகும் முன், ஒரு முறை திரும்பிப் பார்த்து, ரசிகர்களுக்காக கை அசைத்துவிட்டு, உள்ளே சென்றார். சச்சின் சச்சின் என ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள், காற்றில் கரையவே சில மணி நேரங்கள் பிடித்தன.

5 நாள் நடக்க வேண்டிய டெஸ்ட் போட்டி 2.5 நாளில் முடிந்துவிட்டது. யாருக்கு என்ன அவசரமோ. வேகமாக வந்து, முடிந்தேவிட்டது சச்சினின் கடைசி போட்டி. சச்சின் சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் கூட, இன்று ஏதோ ஒரு மன அழுத்ததில் இருக்கிறார்கள். “நாளையிலிருந்து நான் நடிக்க மாட்டேன்” என ரஜினிகாந்த் சொன்னால் எப்படி இந்திய சினிமா ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளாவார்களோ, அப்படி இருக்கிறது சச்சின் ரசிகர்களின் நிலைமை. பலருக்கு, சச்சின் ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட்டே ஓய்வு பெற்றதைப் போல இருக்கிறது.

எந்த ஒரு விளையாட்டை சேர்ந்தவருக்கும் கிடைக்காத அன்பும் மரியாதையும் சச்சினுக்கு கிடைத்திருக்கிறது. ஏன்? அவரால் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஆட்கள், ஒரு விளையாட்டை கண்டு ரசித்திருக்கிறார்கள். சச்சின் அவுட் ஆகும் போதெல்லாம் பலருக்கு சிறிய அளவில் மாரடைப்பு வந்திருக்கிறது. சச்சினின் ஆட்டத்தைப் பார்த்தே, இந்தியாவில் பலர் தொழில்முறையாக கிரிக்கெட் ஆடும் கனவை கொண்டுள்ளார்கள். கிரிக்கெட் ஆடத் தெரியாதவர்கள் கூட, “சச்சின் அவுட்டா, இந்தியா வின் பண்றது சந்தேகம்தான்” என சொல்லும் அளவு தன் விளையாட்டில் ஆளுமை கொண்டிருந்தார். “சச்சின் ஆடும்போது கடவுளே அதைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்”, “கிரிக்கெட் என் மதம் என்றால், சச்சின் என் கடவுள்” என விதவிதமாக இன்றும் அவரைக் கொண்டாடுபவர்கள் உண்டு.

24 வருடங்களாக கிரிகெட்டையே உயிராக மதித்து ஆடிய ஒரு வீரருக்காக தேசமே கண்ணீர் மல்க விடை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டே சச்சினின் காலடியில் இருக்கிறது என பலர் ட்வீட்டுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திலிருந்து, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, சச்சினுக்கு என செய்தி வந்திருக்கிறது. அதையும் தலைக்கு மேல் ஏற்றிக் கொள்ளாமல், ஏதோ பள்ளியில் கிடைத்துள்ள பரிசைப் போல், தன் அம்மாவிற்கு அதை சமர்ப்பணம் செய்வதாக சொல்லியிருக்கிறார் சச்சின். இந்த எளிமைதான், சச்சினை இமாலய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இனி கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு, சச்சினுக்கு முன், சச்சினுக்கு பின் என்றே எழுதப்படும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x