Published : 15 Feb 2014 08:37 PM
Last Updated : 15 Feb 2014 08:37 PM

அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டத்தால் வழிபாடுகள் நிறுத்தம்: மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க கிறிஸ்துவர்கள் முடிவு

திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் அருகே கிறிஸ்தவ தேவாலயம் முன் அரசியல் கட்சிகள், தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால், வழிபாடுகள் நடத்த முடியாமல் கிறிஸ்தவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதனால், திண்டுக்கல் மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் அருகே 170 ஆண்டு கால பாரம்பரியமான தூய வளனார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பிரிட்டிஷ் பாதிரியார் ரப்பா த்தல், 1844-ம் ஆண்டு தொடங்கியுள்ளார். இந்த ஆலயத்தின் கீழ் 44 பங்கு தேவாலயங்கள் செயல்படுகின்றன. இந்த ஆலயத்தில் தினசரி காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையும் ஜெபவழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் நடக்கிறது. இந்த வழிபாடுகளில் தினசரி 3,000 கிறிஸ்தவர்கள் கலந்து வழிபாடு செய்கின்றனர். மேலும், தினசரி காலை முதல் இரவு வரை, கிறிஸ்தவர்கள், இந்த ஆலயத்தில் தனிநபர் வழிபாடு செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்த தேவாலயம் முன் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் வழிபாடுகள் நடத்த முடியாமல் கிறிஸ்தவர்கள் தவிக்கின்றனர். தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் முதல் தேர்தலுக்காக உதயமான உதிரிக் கட்சிகள் வரை, இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் முன் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அதிகளவு நடத்தத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து தூய வளனார் பங்குத் தந்தை மெல்கி லாரன்ஸ் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

வழிபாட்டுத் தலங்கள் முன் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. வழிபாட்டு நேரமான மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையாவது ஒலிபெருக்கி இயக்கங்களை நிறுத்தி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க புகார் செய்தோம்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எனக் காரணம் கூறி நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். மன அமைதி, நிம்மதியை தேடிதான் ஆலயத்திற்கு வருகின்றனர். ஆனால், வழிபாட்டு நேரத்தில் ஆலயம் முன் இசைக்கச்சேரி, பொதுக்கூட்டத்தால் ஆலயத்தில் வழிபாடு நடத்த முடியவில்லை. நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்த பல இடங்கள் உள்ளது.

ஆனால், ஆலயம் முன் குறுகலான இப்பகுதியில் சாலையை மறித்து மேடை போடுவதால் ஆலயத்திற்கு பெண்கள் வர அச்சமடைந்துள்ளனர். ஆலயத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு குறித்து மேடை போட்டு பேசும் அரசியல் கட்சிகள், ஆலயம் முன்பே மேடை போட்டு சிறுபான்மை மக்கள் வழிபாட்டிற்கு இடையூறு செய்வது வேதனையாக உள்ளது. அதனால், அரசியல் கட்சிகளுக்குப் பாடம் புகட்ட தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில்தான் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, போலீஸாரை, சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்றார்.

போராட தயாராகும் வியாபாரிகள்

தூய வளனார் கிறிஸ்தவ ஆலயம் முன் நகராட்சி அலுவலகம் சாலையில் 200-க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் உள்ளன. நகரில் முக்கிய கடை வீதியான இப்பகுதியில் சாலையை மறித்து அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதால், ஏற்படும் இரைச்சல், திரளும் கூட்டத்தால் கடைகளுக்கு, வாடிக்கையாளர்கள் வருவதில்லை.

அதனால், பொதுக்கூட்டம் நடக்கும் நாள்களில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள், ஊர்வலமாகச் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், தற்போதுவரை போலீஸார் இந்த சாலையில்தான் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குகின்றனர். அதனால், கிறிஸ்தவர்களை தொடர்ந்து வியாபாரிகளும் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்

காலை முதல் மாலை வரை, காது கிழிக்கும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கள் மூலம் ஒலிபரப்பாகும் பாடல்கள், வாய் கூசும் மேடைப் பேச்சால் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்த முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

அதனால், அரசியல் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்ட நாளில் தேவாலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்படுவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தியடைந்த இந்த தேவாலயத்தைச் சேர்ந்த 55,000 கிறிஸ்தவர்கள் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x