Published : 13 Feb 2014 08:19 PM
Last Updated : 13 Feb 2014 08:19 PM

குமரியில் முடிவுக்கு வருகிறதா தபால் சேவை? தபால் அட்டை, ஸ்டாம்புக்கு தட்டுப்பாடு

`மக்கா சௌரியமா இருக்கியாடே? வீட்டுல பொஞ்சாதி, பிள்ளைங்க சுகம் தானாடே?’ என, தொலை தூரத்தில் உள்ள சொந்தங்களின் நலம் விசாரிப்பில், முக்கிய இடம் வகித்த தபால் சேவை, தொலைபேசியின் தாக்கத்தால் தற்போது குறைந்து போனது.

கடும் தட்டுப்பாடு

வெறும் 50 பைசா தபால் அட்டையில் நலம் விசாரித்து, நாகர்கோவிலில் இருந்து தாய் எழுதும் கடிதம் கண்டு, பிழைப்புக்காக இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் மகனின் கண்களிலும், மனதிலும் தண்ணீர் சுரக்கும். அத்தகைய பாரம்பரிய பெருமை மிக்க அஞ்சலகங்களில் இன்று தபால் தலைகள், தபால் அட்டைகள் கிடைப்பதில்லை. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தபால் அட்டைகளுக்கும், ஸ்டாம்ப்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடு என்பதையும் தாண்டி இல்லை என்பதே உண்மை.

நாளை வந்து விடும்

கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தாமஸ் கூறுகையில், “தபால் அட்டைகள் அஞ்சல் அலுவலகங்களில் கிடைப்பதி ல்லை. இயக்க தகவல்கள் தொடங்கி, நுகர்வோர் கூட்டம், தீர்மானம் என பலதரப்பட்ட விஷயங்களுக்கும் 50 பைசா தபால் அட்டையைத்தான் பயன்படுத்துவோம். தற்போது தபால் அட்டை கிடைப்பதில்லை. கேட்கும் போதெல்லாம் ‘இருப்பு இல்லை, நாளை வந்து விடும்’ என்கின்றனர்.

கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் இன்னும் தபால் அட்டை வாங்கி எழுதும் வழக்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால், கிராமப்புற அஞ்சலக ங்கள் ஆர்.டி. வசூல் மையங்களா கவும், தொலைபேசி பில் கட்டும் மையங்களாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அஞ்சல் அட்டை தயாரிப்பை அஞ்சல் துறை படிப்படியாக குறைத்து வருவதுதான் தட்டுப்பாட்டுக்கு காரணம்.

நாகரீக மாற்றம், வளர்ச்சி என்ற பெயரில் தொலைபேசி, அலைபேசி, இணையம் என அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தில் அஞ்சல் அட்டையை பொதுமக்கள் தொலைத்ததன் வெளிப்பாடு தான் இது. குமரி மாவட்டத்தில் அஞ்சல் தலை தட்டுப்பாடு களையப்பட வேண்டும். இல்லையேல் நுகர் வோர் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்துவோம்,” என்றார்.

வருத்தம் அளிக்கிறது

ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “தபால் தலைகளுக்கு குமரி மாவட்டத்தில் தட்டுப்பாடு உள்ளது. ரூ.4 மதிப்புடைய ஸ்டாம்ப் சுத்தமாக இருப்பு இல்லை. அதற்கு பதில் 450 காசுக்கு சீல் அடிக்கின்றனர். இதனால் கூடுதலாக 50 காசு செலவாகிறது. நாட்டு விடுதலை, முன்னேற்றத்துக்காக பாடுபட்ட உயர்ந்தவர்களின் படம் பொருத்தி ஸ்டாம்ப் தயாரித்து விட்டு, அதை விநியோகிப்பதில் நடைமுறை சிக்கல் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது,”என்றார்.

குமரி மாவட்ட அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “தமிழகம் முழுவதுமே தபால் அட்டை, ஸ்டாம்புக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் இது அதிகமாக இருக்கிறது. தட்டுப்பாட்டுக்கு காரணம் பிரிண்ட் செய்வதில் ஏற்படும் தாமதம் தான். குமரி மாவட்டத்தில் ரூ.5, ரூ.4 மதிப்புள்ள ஸ்டாம்புகள் சுத்தமாக இல்லாமல் இருந்தது. தற்போது வரத் தொடங்கியுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தட்டுப்பாடு நீங்கும்,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x