

புதுக்கோட்டையில் எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைகள் புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையில் அண்ணா சிலையை மட்டும் மறந்தது அரசியல் காழ்ப்புணர்வினாலா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு சிறப்பு நிதியாக ஒதுக்கிய ரூ.50 கோடியில் நகரில் அடிப்படை வசதிகளோடு நகராட்சி அலுவலகம், நகர்மன்றம், பேருந்துநிலையம், காந்தி பூங்கா, பி.யூ.சின்னப்பா பூங்கா ஆகியன புதுப்பித்தல், புராதன விளக்குகள், நகராட்சி நுழைவாயில் அமைத்தல், அரசு சுவர்களில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பழைய பேருந்து நிலையத்தில் 1945-ல் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கும் வர்ணம் தீட்டி, மின்விளக்குகள், புல், படி, தடுப்பு கம்பிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அருகேயுள்ள அம்பேத்கர் சிலையும் ரூ.5 லட்சத்தில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், காந்தி பூங்கா அருகே 1970-ல் அமைக்கப்பட்ட அண்ணா சிலையை மட்டும் மறந்துவிட்டனர். அதிக போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ள இவ்விடத்தில் உள்ள அண்ணாவின் சிலை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் உள்ளது இதிலும் அரசியல் உள்ளதா என பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சியின் நூற்றாண்டுக்காக ஒதுக்கப்பட்ட அரை கோடி ரூபாயில் சில ஆயிரங்களைக் கொண்டே பராமரிப்பு பணியை மேற்கொண்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் கட்சியினர். ஏன், அண்ணாவின் சிறப்புகளைக் கூறியே அரசியல் நடத்துவோர் ஆண்டுக்கு ஒருமுறையேனும் இச்சிலையை பராமரிக்க முன்வந்திருக்கலாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து திமுக நகராட்சி உறுப்பினர் சுப.சரவணன் கூறியது: “அதிமுகவினர் அண்ணாவை நேசிப்பதாக இருந்திருந்தால் முதலில் அண்ணா சிலையைத்தான் பராமரித்திருக்க வேண்டும். அண்ணாவை மறந்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்று தெரிந்தும் அண்ணா சிலையைப் பராமரிக்க மறந்துவிட்டார்கள். இதையெல்லாம் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு செய்யக்கூடாது, தானாகவே அவர்களின் மனதில் உதித்திருக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.அப்துல்ரகுமான் கூறுகையில், “அண்ணா சிலை பராமரிப்பு பணி விரைவில் மேற்கொள்ளப்படும்” என்றார். புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே பராமரிப்பின்றி உள்ள அண்ணா சிலை. (அடுத்த படம்) பொலிவுடன் காணப்படும் எம்ஜிஆர் சிலை.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையையும், அம்பேத்கர் சிலையையும் பராமரித்த நகராட்சி நிர்வாகம், காந்தி பூங்கா அருகேயுள்ள அண்ணா சிலையை மட்டும் பராமரிக்கவில்லை. அண்ணாவின் சிறப்புகளைக் கூறியே அரசியல் நடத்துவோராவது அவரது சிலையை பராமரிக்க முன்வந்திருக்கலாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.