

உலகம் முழுவதும் வியாழக்கிழமை (நவ.21) மீனவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் மீனவர்களது வாழ்க்கை குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் மீனவர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மீனவர் தினம்
கடலோடு போராடி, கடலோடு உறவாடி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் மீனவர்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 83 கடலோர கிராமங்கள், வங்கக் கடலோரமும், அரபிக் கடலோரமும் அமைந்திருக்கின்றன.
இங்கிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுவருகிறார்கள். சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் இவர்களது தொழிலை கௌரவிக்கவும், அவர்களைப் பற்றி மற்றவர்கள் நினைத்துப் பார்க்கவும் ஆண்டுதோறும் மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.
உரிய விலை கிடைப்பதில்லை
மீனவர் தினம் கொண்டாடினாலும், அவர்களது கோரிக்கைகள் கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போகின்றன. அவர்களது வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்தும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் குறித்தெல்லாம் செவிகொடுத்து யாரும் கேட்பதாக இல்லை.
ஏது குடிநீர்?
அனைத்து கடலோரக் கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. கடல்நீர் நிலத்தடியில் உட்புகுவதால் ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் தண்ணீரை எடுத்து பயன்படுத்த முடியவில்லை. இதனால் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மீனவர்கள் அரும்பாடுபட்டு பிடித்துவரும் மீன்களுக்கு உரிய சந்தை விலை கிடைப்பதில்லை. அந்த மீன்களை வாங்கி விற்கும் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் லாபம் கொழிக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் மீன்பிடிப்பு அதிகமுள்ள கிராமங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் உவரியில் ரூ. 2 கோடி செலவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழிகூட போடவில்லை.
பைபர் படகுகளில் உள்ள வெளிப்பொருத்தும் இயந்திரங்களை பழுதுநீக்கி அளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பணிமனைகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை கவனிப்பாரில்லை. கடல் சீற்றம் அதிகமுள்ள காலங்களில் வீடுகளில் முடங்கியிருக்கும் மீனவர்கள் ஆண்டுமுழுக்க மீன்பிடிக்க செல்லும் வகையிலும், மீனவர் கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையிலும் தேவையான இடங்களில் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்டு தூண்டில் வளைவுகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
அரசுகள் முன்வர வேண்டும்
இந்த மாவட்டங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பல மாதங்களாக வதைபடுவது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுசெயலர் சர்ச்சில் வேதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கும், கேரளம், கர்நாடகம், மகராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்லும் மீனவர்களுக்கு நேரும் பிரச்னைகளை தீர்க்க அந்தந்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை கவனிக்கும் வகையிலும், இங்குள்ள மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் மத்தியில் தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களின்போது கடலில் காணாமல்போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த ஹெலிகாப்டர், அதிவிரைவு படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
அர்த்தமுள்ள தினமாகுமா?
கடலில் காணாமல்போகும் மீனவர்களை கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மாநில அரசால் வாங்கப்பட்டு, தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும் நிறுத்தப்பட்டிருந்த இரு அதிவிரைவு படகுகள் பராமரிப்பின்றியே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டன .
உலக மீனவர் தினத்தை, மீனவர் அமைப்புகள் மட்டுமே நினைவுபடுத்தி, நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் தான், அவர்களுக்காக ஆண்டுதோறும் வந்து, கடந்து செல்லும் தினத்துக்கு அர்த்தம் இருக்கும் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.