

சென்னையில் கல்வி நிறுவன வாகனங்களை கண்காணிக்கும் குழு, பள்ளி வாகனங்களில் செவ் வாய்க்கிழமை அதிரடி ஆய்வை தொடங்கியது. இதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்படும் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி வாகனங்களுக்கு முக்கிய மாக கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளை தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி வகுத்தது. அதில் ஒன்று கல்வி நிறுவன வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்க வேண்டுமென தெரிவித்தது. இந்த குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், போலீஸ் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்புகளிலும் இருப்பார்கள். இந்த குழு 6 மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும்.
அதன்படி, சென்னை மாவட்டத் தின் கல்வி நிறுவன வாகன கண் காணிப்பு குழு அடையாறில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியது. காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை ஆய்வு நடை பெற்றது. இதில், மாவட்ட துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அசோக்குமார் (கே.கே.நகர்), சுந்தரேசன் (மந்தைவெளி), தாமோதரன் (திருவான்மியூர்), வாகன ஆய்வாளர்கள் செழியன், செந்தூர்வேலன், ஜெயபாஸ்கர், தர், விஜயகுமார் மற்றும் போலீஸ், கல்வித்துறை அதிகாரி கள் ஈடுபட்டனர்.
பள்ளி வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், டிரைவரின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மொத்தம் 200 பள்ளி வாகனங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினோம். இதில் எமர்ஜென்சி கதவுகள், ஹேண்ட் பிரேக் உள்ளிட்ட குறைபாடுகள் இருந்த 4 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்டங்கள்தோறும் உள்ள வாகனங்களை கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் எழும்பூரை மையமாகக் கொண்டு பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். இதில், விருகம்பாக்கம், அண்ணாநகர், அயனாவரம் ஆகிய வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது” என்றனர்.