

பருவமழை பொய்த்ததாலும், வறட்சி காரணமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் கிணறுப் பாசனம் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட 530 ஹெக்டேர் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை குறைந்ததால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் குறைந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சம்பா சாகுபடியை அதிகரிக்க, தமிழக அரசு சம்பா சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக தொடர் வறட்சி மற்றும் பருவமழை இன்மையால் நெற்பயிர் சாகுபடி பரப்பளவு தமிழகத்தில் பாதியாகக் குறைந்துள்ளது.
ஒருபோக சாகுபடியான சம்பா சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவரும் விருதுநகர் மாவட்டத்தில், சராசரியாக 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி நிலவி வருவதாலும், குறிப்பாக நடப்பு ஆண்டில் 6 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாததாலும், அதன்மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் தண்ணீர் வரத்து இன்றி வேளாண்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளான திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில், சுமார் 550 ஹெக்டேரில் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம், பாசனம் பெறும் பகுதிகளில் மட்டுமே தற்போது நெல் பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 530 ஹெக்டேர் நெல் பயிரில் கதிர்கள் முற்றி சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.ராமச்சந்திராஜா கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் மழையின்மை மற்றும் வறட்சி காரணமாக, நெல் சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துவிட்டது. கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குளங்கள்,ஆற்றுப் பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. தற்போது, கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளதாகவும், ஓரிரு வாரத்தில் இவை அறுவடை செய்யப்படும் என்றார் அவர்