Last Updated : 01 Mar, 2017 01:18 PM

 

Published : 01 Mar 2017 01:18 PM
Last Updated : 01 Mar 2017 01:18 PM

என்றும் காந்தி!- 20: நடை எனும் அரசியல் செயல்பாடு

நடை! காந்தியின் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களுள் ஒன்று! இந்திய வரலாற்றிலும் காந்தியின் நடை மிகவும் முக்கியமானது. மூன்று கண்டங்களில் மூன்று நாடுகளில் நடந்தவர் காந்தி (இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா). அவர் நடந்த பாதைகளில் பலவும் அவரது நடையால் புத்துயிர் பெற்றிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இதற்கு, தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தின்போது அவர் நடத்திய அணிவகுப்புகள், இந்தியாவில் உப்பு சத்தியாகிரகம், ஹரிஜன் யாத்திரை, நவகாளி யாத்திரை போன்றவையே சான்று.

1913-லிருந்து 1938 வரை தனது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சத்தியாகிரகங்கள் போன்றவற்றின்போது மொத்தம் 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காந்தி நடந்திருக்கிறார் என்று ஒரு கணக்கு சொல்கிறது. பூமியை இரண்டு முறை சுற்றிவந்ததற்கு இது சமம்.

நடையை, ‘உடற்பயிற்சிகளின் இளவரசன்’ என்று காந்தி குறிப்பிடுவார். நடைப்பழக்கத்தின் மீதான காதல், காந்திக்குப் பள்ளிப் பருவத்திலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு வயதில் காந்திக்கு உடற்பயிற்சி வகுப்புகளில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. பள்ளி விட்டதும் தன் தந்தைக்குப் பணிவிடை செய்வதையே அவர் விரும்பினார் என்பதால் உடற்பயிற்சி வகுப்புகளைத் தவிர்த்தார். அதை ஈடுகட்டும் விதத்தில் அவரது நடைப் பழக்கம் இருந்தது. காற்று வாங்கிக்கொண்டே நடந்தால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று எங்கோ படித்திருந்ததால் பள்ளியிலிருந்து வீட்டுக்கு காந்தி நடந்தே சென்றார். தந்தைக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த தருணங்களில் அவர் உறங்கிவிட்டாலோ காந்தி கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வருவதுண்டு.

இங்கிலாந்தில்…

இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காகச் சென்றபோதுதான் நடைப்பழக்கம் காந்திக்குத் தீவிரமானதாக மாறியது. அவர் குடும்பச் சூழல் அவ்வளவு செல்வச் செழிப்பாக இல்லை என்பதால் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எப்போதும் இருந்தது. ஆகவே, கூடுமான வரை நடந்தே எங்கும் சென்றார். இங்கிலாந்து நாட்களில் ஆரம்பத்தில் வெளியில் செல்லும்போது போக்குவரத்துச் செலவுக்காகக் கையில் கொஞ்சம் பணத்தை காந்தி எடுத்துச்செல்வதுண்டு. இப்போது அந்தப் பணம் மிச்சம். இந்தப் பழக்கத்தால் பணத்தை மிச்சம் பிடித்தது போலவும் ஆயிற்று; தினமும் பத்து மைல் தூரம் வரை நடந்ததால் உடற்பயிற்சி செய்ததுபோலவும் ஆயிற்று. இங்கிலாந்தில் இருந்தபோது தனக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏதும் ஏற்படாததற்கும் கட்டுறுதியான உடலமைப்பு இருந்ததற்கும் இந்த நடைப்பழக்கம்தான் காரணம் என்று காந்தி குறிப்பிடுகிறார்.

1890-ல் பாரிஸில் நடந்த மாபெரும் பொருட்காட்சியைக் காண்பதற்காக இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு காந்தி சென்றார். பாரீஸில் ஒரு சைவ உணவகம்-தங்குமிடத்தில் அறையை அமர்த்திக்கொண்டார். கையில் பாரிஸின் வரைபடத்தை வைத்துக்கொண்டு பெரும்பாலும் நடைபயணமாகவே பாரிஸைச் சுற்றிப் பார்த்தார்.

நடந்தே நீதிமன்றத்துக்கு…

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பிறகு சில மாதங்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வழக்குகளைச் சந்தித்தார். அப்போது கிர்காவும் என்ற இடத்தில் குடும்பத்தோடு தங்கினார். அங்கிருந்து உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட ஆறு கி.மீ. தொலைவில் இருந்தது. எனினும் தினசரி 45 நிமிடங்கள் நடந்தே உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். வீடு திரும்பி வருவதும் அப்படித்தான். அதன் மூலம் சுட்டெரிக்கும் வெயிலுக்குத் தான் நன்றாகப் பழகிக்கொண்டதாக காந்தி குறிப்பிடுகிறார். அவருடைய பம்பாய் நண்பர்கள் பலருக்கும் உடல்நலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் தனக்கு ஒரு முறைகூட ஏதும் ஏற்பட்டதில்லை என்பதை காந்தி தன் சுயசரிதையில் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். வழக்குகள் வர ஆரம்பித்து, பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும் காந்தி நீதிமன்றத்துக்கு நடந்து செல்வதை நிறுத்தவே இல்லை.

நடையரசியலின் தொடக்கம்!

தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி சென்ற பிறகு 1885-ல் அவர் இருந்த ட்ரான்ஸ்வால் பகுதியில் கடுமையான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் ஒரு பகுதி, பொது நடைபாதைகளில் இந்தியர்கள் நடக்கக் கூடாது என்பதும் இரவு 9 மணிக்கு மேல் பெர்மிட் இல்லாமல் இந்தியர்கள் வெளியில் வரக் கூடாது என்பதும். அராபியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

காந்தி தனது ஆங்கிலேய நண்பர் கோட்ஸுடன் அப்போது இரவு நேரங்களில் நடையுலாவிவிட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் திரும்பி வருவார். தன்னிடம் வேலை பார்த்த ஆப்பிரிக்கர்களுக்கு கோட்ஸ் அவ்வப்போது பெர்மிட் வழங்குவது வழக்கம். பெர்மிட் இல்லாததால் காந்தியைக் காவலர்கள் கைதுசெய்துவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். அவரால் காந்திக்கு பெர்மிட் கொடுத்திருக்க முடியும்; அப்படிச் செய்தால் காந்தியைத் தனது வேலையாளாகக் கருதுகிறார் என்பதுடன், அது பித்தலாட்டமாகவும் இருக்கும் என்று அவர் தயங்கிக்கொண்டிருந்தார். எனினும், தென்னாப்பிரிக்க அதிபர் க்ரூகரின் வீடு இருக்கும் பகுதிவரை அஞ்சாமல் இருவரும் நடையுலாவிவிட்டு வருவது வழக்கம். அங்கே ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் காந்தியைக் கண்டுகொள்வதில்லை என்பதால் அச்சமின்றி அவர்கள் நடையுலாவிவிட்டு வருவார்கள். ஆனால், ஒருமுறை ரோந்துக் காவலர் ஒருவர் முன்னறிவிப்பு ஏதுமின்றி காந்தியை நடைபாதையிலிருந்து சாலையில் தள்ளிவிட்டு உதைக்க ஆரம்பித்தார். காந்தியைத் தூக்கிவிட்ட கோட்ஸ், “காந்தி, நான் எல்லாவற்றையும் பார்த்தேன். ஆகையால், அந்தக் காவலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நான் உங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்வேன்” என்றார். அதற்கு காந்தி, “பாவம் அந்தக் காவலருக்கு என்ன தெரியும்… என்னை நடத்தியதுபோல்தானே கறுப்பினத்தவர்களையும் அந்தக் காவலர் நடத்துவார்! எனது சொந்தப் பாதிப்புக்கு நீதிமன்றச் செல்வதில்லை என்பதை விதிமுறையாக நான் கடைப்பிடித்துவருவதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்” என்றார் காந்தி.

காந்தி நடையைத் தவிர்த்திருந்தால் பல முறை கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து தப்பித்திருக்கலாம். எனினும், ‘நடை என்பது மனிதர்கள் அனைவருக்குமான பிறப்புரிமை’ என்ற உணர்வுடன் இருந்த காந்தி கடைசிவரை விடாப்பிடியாக நடந்தார்.

தென்னாப்பிரிக்கக் காலத்தில் இன்னுமொரு சம்பவம். இடையில் இந்தியாவுக்குச் சென்றுவிட்டுத் தென்னாப்பிரிக்காவுக்கு காந்தியும் அவரது குடும்பமும் வேறு பல இந்தியர்களுடன் திரும்பிவருகிறார்கள். தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தியின் நடவடிக்கைகளில் கோபம் கொண்ட தென்னாப்பிரிக்க ஆங்கிலேயர்கள் துறைமுகத்திலேயே காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குடும்பத்தினரை முன்னே அனுப்பிவிட்டு காந்தியும் அவரது ஆங்கிலேய நண்பர் லாட்டனும் நடந்தே வருகிறார்கள். அவர்களைச் சூழ்ந்துகொண்ட வெள்ளையர்களின் கும்பல் காந்தியைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் காந்தியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கறுப்பினத்தவர் ஒருவரின் கைரிக்‌ஷாவை அழைக்கிறார் லாட்டன். ஆனால், மனிதர் இழுக்க அதில் அமர்ந்து போவதை விரும்பாத காந்தி மறுத்துவிடுகிறார். அந்த கைரிக்‌ஷாக்காரரும் கூட்டத்தைக் கண்டு ஓடிவிடுகிறார். வெள்ளையர் கும்பலோ காந்தியைத் தனிமைப்படுத்தி மிக மோசமாகத் தாக்க ஆரம்பிக்கிறது. வெள்ளையின போலீஸ்காரர் அலெக்ஸாண்டர் என்பவரின் மனைவி குறுக்கிட்டு காந்தியைக் காப்பாற்றிப் பத்திரமாக அனுப்பி வைக்கிறார். தன்னைத் தாக்கியவர்களில் சிலரை காந்திக்குத் தெரியும் என்றாலும் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க காந்தி மறுத்துவிடுகிறார். அவர்கள் மீது குற்றமில்லை; வெள்ளையினச் சமூகத்தின் தலைவர்களும் நேட்டால் அரசும்தான் இதற்குக் காரணம் என்று சொல்லிவிடுகிறார் காந்தி.

நடக்கும்போது தான் சந்தித்த பிரச்சினைகளைத் தன்னுடைய பிரச்சினையாகக் கருதாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாகக் கருதிய காந்தி தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டங்களில் நடையை, அதாவது அணிவகுப்பை முக்கியமான ஆயுதமாகக் கையில் எடுக்கிறார். அந்த ஆயுதம் தென்னாப்பிரிக்காவில் இந்தியச் சமூகத்துக்கு சாத்வீகமான சமரசத் தீர்வை வெற்றியாக அளிக்கிறது.

நடைக்கல்வி

தன் பிள்ளைகளுக்குக் கல்வியையும் நடை மூலமாகவே காந்தி சொல்லிக்கொடுத்தார். அவரது இருப்பிடத்துக்கும் ஜோஹன்னஸ்பர்கில் இருந்த அவரது அலுவலகத்துக்கும் இடையிலான தூரம் ஆறு மைல்கள். தினமும் அந்தத் தொலைவை நடந்தே கடந்தார். அப்படி நடக்கும்போது பல நாட்கள் தன் மகன்களையும் அழைத்துச் செல்வார். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்பதால் தானே அவர்களின் ஆசிரியராக மாறினார். குஜராத்தி மொழியிலேயே அவர்களுடன் உரையாடிப் பல விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார்.

ஒருமுறை காந்தியின் மகன் மணிலால் (அப்போது வயது 10) தனது கண்ணாடியை அணிந்துவர மறந்துவிட்டார். 5 கி.மீ. தூரம் நடந்துவந்துவிட்ட பிறகுதான் காந்தி அதைக் கவனித்தார். இன்னொரு கண்ணாடி வாங்கும் அளவுக்குத் தங்களின் பொருளாதாரச் சூழ்நிலை இல்லையென்று சொல்லி மணிலாலைத் திருப்பியனுப்பி கண்ணாடியை எடுத்துவரச் சொன்னார்.

இந்தியாவுக்கு வந்த பிறகும் கூடுமான வரை பல இடங்களுக்கும் நடந்தே சென்றார். சம்பாரண் சத்தியாகிரகத்தின்போது பல இடங்களுக்கும் நடந்தே சென்று அவுரி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். எனினும் காந்தியின் நடையின் சக்தியை உலகமே கண்டுகொண்டது உப்பு சத்தியாகிரகத்தின் போதுதான்! இந்தியாவில் காந்தியின் நடை சாதித்தது என்ன என்பதை நாளை பார்க்கலாம்!

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

- (நாளை...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x