Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

திண்டுக்கல்: அரசு மருத்துவமனயில் பார்க்கிங் வசதியே இல்லாமல் கட்டணம் வசூல்

திண்டுக்கல் மருத்துவமனையில் பார்க்கிங் கட்டண வசூல் உரிமையை டெண்டர் எடுத்தவர்கள், வாகனங்களை நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக பணத்தை வசூல் செய்கின்றனர். பார்க்கிங் வசதியே இல்லாமலே பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நோயாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தினசரி உள்நோயாளிகள் 500 பேர், வெளிநோயாளிகள் 3,000 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனைகளில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையும் ஒன்று.

பரபரப்பான மருத்துவமனை

முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், திண்டுக்கல் வழியாக செல்வதால் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளில் காயம் அடைவோர் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளைப் பார்க்க தினசரி ஏராளமான உறவினர்கள் வந்து செல்கின்றனர். அதனால், இந்த அரசு மருத்துவமனையில் காலை முதல் இரவு வரை பரபரப்பாகக் காணப்படும்.

அரசு மருத்துவமனையில் போதுமான சிகிச்சைக் கருவிகள், தரமான சிகிச்சை கிடைப்பதால் நோயாளிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களைப் பார்க்கவரும் உறவினர்கள் தங்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முறையான பார்க்கிங் வசதியில்லாதது பெரும் குறையாக உள்ளது. ஆனால், மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய பொதுப் பணித் துறை தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளது. தனியார், பார்க்கிங் டிக்கெட் கொடுத்து கட்டணம் வசூல் செய்ய ஆள்களை நியமனம் செய்துள்ளனர். இவர்கள், மருத்துவமனையின் இரு பிரதான நுழைவு வாயிலில் நின்றுகொண்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், உறவினர்களிடம் டிக்கெட் கொடுத்து கட்டணம் வசூலிக்கின்றனர்.

பொதுப் பணித் துறை, ஒரு வாகனத்துக்கு பார்க்கிங் செய்ய ரூ.4 டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் தனியார், ரூ.4 டிக்கெட் கொடுத்துவிட்டு ரூ.5 அடாவடியாக வசூலிக்கின்றனர். மேலும், பார்க்கிங் டிக்கெட் வழங்காமலேயே ரூ.5 வசூல் செய்கின்றனர். கூடுதல் பணம் கொடுக்க மறுத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்கள் உறவினர்களை ஏக வசனத்தில் திட்டுகின்றனர்.

வாகனங்களை மறித்து கூடுதல் ரூபாய் வழங்கினால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மருத்துவமனையில் பார்க்கிங் டிக்கெட் வசூலிக்க டெண்டர் விட்ட பொதுப் பணித் துறை நிர்வாகம், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதைக் கண்காணிக்காமலும், வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு போதிய வசதிகளை செய்துதராமலும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நோயாளிகள் கூறியது:

மருத்துவமனை நுழைவுவாயிலில் வாகனங்களுக்கு சிறிய டெண்ட் மட்டுமே உள்ளது. அந்த டெண்டில் பத்து வானங்களை மட்டுமே நிறுத்த முடியும். மற்றவர்கள் வாகனங்களைக் கொண்டு வந்தால் எங்கு நிறுத்துவது எனத் தெரியாமல் விழிக்கின்றனர். மருத்துவமனைக் கட்டிடங்கள் முன் நிறுத்தினால் ஊழியர்கள் திட்டுகின்றனர். பார்க்கிங் கட்டணம் மூலம் வருமானம் பார்க்கும் பொதுப் பணித் துறை, வாகனங்களை நிறுத்தும் இடங்களை அடையாளம் காட்ட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் சேவை அடிப்படையில்தான் செயல்படுகின்றன. அதனால், எந்த ஒரு பயன்பாட்டுக்கும், சேவைக்கும் கட்டணம் பெறக்கூடாது. ஆனால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மட்டும் விதிவிலக்காக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தைக்கூட முறையாக வசூல் செய்யவில்லை. டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளதைவிட கூடுதலாக வசூலிக்கின்றனர் என்றனர்.

இதுகுறித்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களிடம் கேட்டபோது, 1-ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. அதனால், தற்போதே ரூ.4-க்கு பதில் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.5 வசூலிக்கிறோம். இதில் என்ன தவறு. மருத்துவமனையில் எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும் எங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

கூடுதலாக வசூலித்தால் அபராதம்

இதுகுறித்து பொதுப் பணித் துறை கட்டிடப் பராமரிப்பு உதவிப் பொறியாளர் தங்கவேலிடம் கேட்டபோது அவர் கூறியது:

அரசு வாகனங்களைத் தவிர அரசு மருத்துவமனையில் நுழையும் எந்த ஒரு வாகனத்துக்கும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்ய டெண்டர் எடுத்தவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கட்டணம் பெறாவிட்டால் வாகன ஓட்டிகள், கட்டுப்பாடு இல்லாமல் மருத்துவமனையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி சென்றுவிடுவார்கள். அதனால், கடந்த 10 ஆண்டாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வசூல் உரிமம் டெண்டர் விடப்படுகிறது. கூடுதல் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக டிக்கெட்டில் உள்ள கட்டணத்தை மட்டுமே டெண்டர் எடுத்தவர்கள் பெற வேண்டும். அதைவிட கூடுதலாக வாங்கினால் குற்றம். நாங்கள் மட்டுமில்லாது மருத்துவத்துறை அதிகாரிகளும் இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விசாரிக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x