Last Updated : 26 Dec, 2013 12:00 AM

 

Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

சிறப்பு ரயில்கள் நிரந்தரமாகுமா?

தென்மாவட்டங்களில், ரயில்வே துறையின் இருவழிப்பாதை, மின்மயமாக்கல், புதிய ரயில்கள், ரயில்வே தொழிற்சாலைகள், ரயில்நிலையங்களை விரிவாக்கம் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களில் புறக்கணிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிறப்பு ரயில்கள்

ரயில்வேத்துறை சார்பில், கூட்டநெரிசல் உள்ள சீசன் நேரங்களில், சிறப்பு ரயில்கள் ஆண்டு தோறும் இயக்கப்படுகின்றன. தொலைதூரங்களுக்கு இயங்கும் ரயில்களின் பெட்டிகள் ஒரு சில நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த காலி ரயில்பெட்டிகள் தான் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இவ்வாறு தென் மாவட்டங்களிலிருந்து, சென்னைக்கு அதிக ரயில்கள் இயக்கப்படும்.

பொதுவாக ரயில்வேதுறை ஓர் புதிய வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றால் அந்த வழித்தடத்தில் முதலில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கும். இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு உள்ளதா, அ ந்த வழித்தடத்தில் இயக்கியதில் கிடைத்த வருமானம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு

இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கணக்கில் கொண்டு, பட்ஜெட்டில் அந்த ரயில்களில் ஒரு சில ரயில்கள் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்படும். ஆனால், தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்படுவது இல்லை. இது பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஆனால், கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து பல்வேறு ரயில்கள் முதலில் சிறப்பு ரயில்களாக இயக்கி அதன் பிறகு, நிரந்திர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

கொச்சுவேலி -ஹூப்ளி, கொச்சுவேலி –பாவாநகர், கொல்லம் -ஐதராபாத், எர்ணாகுளம் - பெங்களூர், புதுடெல்லி - திருவனந்தபுரம் என்று பல ரயில்கள் அவ்வாறு நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. தமிழகம் என்றால் ரயில்வேதுறை வேறு கொள்கைகளை பின்பற்றி வருவது வியப்பாக இருப்பதாக பயணிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

நாகர்கோவில்-சென்னை ரயில்

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுகிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் வகையில், சிறப்பு ரயில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஞாயிற்றுகிழமை நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதால், வாரவிடுமுறை முடித்து சென்னைக்கு செல்லும் பயணிகளால் நிரம்பி, ரயில்வே துறைக்கு கனிசமான வருமானமும் ஈட்டித்தருகிறது. இந்த ரயிலை இயக்க தேவையான பெட்டிகள், காலஅட்டவணையுடன் கூடிய வழித்தடம், பராமரிப்பு பணிகள் போன்ற அனைத்தும் இருந்தும், இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை.

நெல்லை- சென்னை சிறப்பு ரயில்

ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். கடந்த ஆண்டு திருநெல்வேலியிருந்து தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் போன்று பகல்நேர சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலும் நிரந்தரமாக்கப்படவில்லை.

குளிர்சாதன ரயில்

இவ்வாண்டு கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, வழியாக சென்னைக்கு, முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தென் மாவட்ட பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி–மும்பை சிறப்பு ரயில்

மும்பையைத் தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே, தொடர்ந்து 4 ஆண்டுகளாக திருநெல்வேலி–மும்பை மார்க்கத்தில், சிறப்பு ரயில்களை திருநெல்வேலிக்கு இயக்கி வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து மங்களூர், மட்கான் வழியாக மும்பைக்கு குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம். எனவே இந்த சிறப்பு ரயிலை வரும் பட்ஜெட்டில் அறிவித்து நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் -ஐதராபாத் சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து முதன்முறையாக மதுரை, திருப்பதி வழியாக காச்சுகுடாவுக்கு (ஐதராபாத்) வராந்திர சிறப்பு ரயில் இந்த ஆண்டு இயக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. ஆனால் ஐதராபாதக்கு இதுவரை நேரடி ரயில் வசதி இல்லை. எனவே, இந்த ரயில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த ரயிலையும் நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாகர்கோவில்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

இந்த ஆண்டு முதன்முறையாக வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் வேளாங்கண்ணிக்கு நிரந்தரமாக ரயில் இயக்க வேண்டும் என்பது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும்.

நாகர்கோவில்-மங்களூர் சிறப்பு ரயில்

கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தென்பகுதிகளான நேமம், நெய்யாற்றங்கரை, பாறசாலை பகுதியிலிருந்து, கேரள மாநிலம் மலபார் பகுதிகளான சொர்னூர், கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணூர் , காசரகோடு மற்றும் மங்களூருக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.

கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை. நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஓணம் மற்றும் பல்வேறு கூட்ட நெரிசல் மிக்க நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு நேரடி ரயில் வசதி வேண்டி, திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களூர் புறப்படும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐந்து பெட்டிகள் கொண்ட லிங்க் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் யோசனை தெரிவிக்கிறார்கள்.

செங்கோட்டை–சென்னை

ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் செங்கோட்டையிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று அந்த பகுதி பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x