

காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்காததால் நகை, பணத்துக்காக உயிரைப் பறிக்க வேண்டாம் என கொள்ளையர்களிடம் கெஞ்சும் நிலைக்கு மதுரை மக்கள் வந்துவிட்டனர்.
திருடன் பெரிதா, போலீஸ் பெரிதா என்று கேட்டால் திருடன்தான் பெரிது என்று சொல்லும் மனநிலை தற்போது மதுரை மக்களுக்கு வந்துவிட்டது. அண்மைக்காலமாக மாநகரம், புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.
குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை பாலீஷ் போடுவது, அருகம்புல் கேட்பது, முகவரி கேட்பது, வாடகைக்கு வீடு தேடுவது, காவல்துறையினர் என நடிப்பது போன்று பல நூதன வழிகளைப் பின்பற்றி கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும் சாலையில் நடந்தோ, பைக்கிலோ செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு நடைபெறாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
உச்சகட்டமாக நவ.14-ம் தேதி எஸ்.எஸ் காலனியில் 5 பவுன் நகைக்காக செண்பகவள்ளி, வியாழக்கிழமை வில்லாபுரத்தில் 11 பவுன் நகைக்காக மெகர்பானு ஆகியோர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர செவ்வாய்க்கிழமை இரவு கருப்பாயூரணி சுசீலாதேவி என்பவரைத் தாக்கி 63 பவுன் நகை கொள்ளையடித்தது உள்பட பல நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொருமுறையும் சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போலீஸார், ‘தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 2 நாளில் குற்றவாளிகள் சிக்குவர்’ என தேய்ந்த ரெக்கார்டைப்போல கூறி வருகின்றனர். ஆனால் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனால் காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மை மதுரை மக்களிடம் குறைந்து வருகிறது. எனவே அதற்குப் பதிலாக, கொள்ளையர்களிடம் கெஞ்சும் நிலைக்கு மதுரை மக்கள் வந்துவிட்டனர்.
இதுபற்றி அண்மையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய வில்லாபுரத்தைச் சேர்ந்த விஜயலெட்சுமி (66) என்பவர் கூறியது:
சில வாரங்களுக்கு முன் வீட்டுக்கு வந்த 2 பேர், திடீரென என் தலையில் தாக்கினர். பின்னர் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டிலிருந்த நகை, பணத்தை எடுத்துத்தருமாறு கூறினர். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை எனவும், உயிரோடு விட்டுவிடுமாறும் கெஞ்சினேன். இதனால் என்னிடம் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு, 2 பேரும் தப்பிவிட்டனர். அன்று அவர்களிடம் கெஞ்சாமல் இருந்திருந்தால் என் கதி அவ்வளவுதான்’ என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் கூறுகையில், ‘மற்ற பகுதிகளைவிட வில்லாபுரம், அவனியாபுரம் பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காவல்துறையினர் போதிய அளவு பாதுகாப்பு அளிக்காததே காரணம். எனவே கொள்ளையர்களுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தயவுசெய்து நகை, பணத்துக்காக பெண்கள், முதியோரின் உயிரைப் பறிக்காதீர்கள்.
தேவையானதை எடுத்துக்கொண்டு அவர்களை உயிரோடு விட்டுவிட்டால் போதும். பிச்சை எடுத்தாவது பிழைத்துக்கொள்வர். ஒருவரின் உயிரையே பறித்துவிடுவதால் அந்த குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது’ என்றார்.