

ஒரு காலத்தில் உயர்நிலைக் கல்வியில் சரியான தேர்ச்சி பெறாதவர்களுக்கும், குடும்ப சூழல் போன்ற பல காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட இருந்தவர்களுக்கும் ஒரே வாய்ப்பாக இருந்தது தொழிற்கல்விப் பிரிவு. கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், பள்ளிகளில் கட்டாயமாக்கப்படாமல் விடப்பட்டதால், தற்போது முற்றிலும் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தொழிற்கல்வியில் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தில், தற்போது அப்படி ஒரு பாடப்பிரிவே இல்லாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது:
கடந்த 1978 ம் ஆண்டு, மேல்நிலைக் கல்விப் பிரிவு அறிவிக்கப்பட்டபோது, அதில் பொதுப்பாடப் பிரிவையும், தொழிற்கல்வி (வொகேஷனல்) பாடப் பிரிவையும் அரசு அறிவித்தது. தொழிற்கல்வியில் 6 முக்கியப் பிரிவுகளையும், அதன் கீழ் 66 பாடப் பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இத் திட்டம் மிகுந்த வரவேற்புடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது.
இந்த பிரிவில் மேல்நிலைக் கல்வி முடிப்பவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி மூலம் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு, எளிமையான உயர்கல்வி வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டிடங்களும், உபகரணங்களும் வழங்கப்பட்டன. அதன் பிறகு தொழிற்கல்விப் பிரிவில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பெற, டிப்ளமோவில் 10 %, கலைப் பிரிவில் 25 %, தொழில்நுட்பக் கல்வியில் 4 %, ஆசிரியர் பயிற்சியில் 25% என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இப்படி பல முன்னேற்றங்களை கொண்டிருந்த இந்த பாடப்பிரிவு தற்போது கல்விமுறையிலிருந்தே வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.
சம வேலைக்கு, சம ஊதியம்
இவர்கள், பொதுப்பிரிவு ஆசிரியர்களை விட குறைவான சம்பளம், பகுதி நேர ஆசிரியரகளாக பணியமர்த்தப்பட்டனர். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் 1990,1992 மற்றும் 1994 ஆகிய ஆண்டுப் பிரிவுகளில் உள்ளவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். இருப்பினும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தகுதியிலேயே வைக்கப்பட்டனர். பொது பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு உள்ள பதவி உயர்வு இவர்களுக்கு
2008 வரை வழங்கப்படவில்லை. அதன்பிறகு சிலரை வயது அடிப்படையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்தினர். சம வேலைதான் என்றாலும், சமமான ஊதியமோ, பதவியோ இல்லை. 1993ல் அப்போதைய முதல்வராக இருந்த, இன்றைய முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எச்.எச்.லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையின் படி, பல நல்ல மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் தேர்தல், ஆட்சி மாற்றம் வந்து அறிக்கைகளும், திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டன.
கட்டாயமாக்க வேண்டியது...
கடந்த 13 வருடங்களாக எந்தப் பள்ளியிலும் தொழிற்கல்விப் பிரிவு துவங்கப்படவில்லை. சில இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனமும் 2007 க்குப் பிறகு நிறுத்தப்பட்டது.
பாடத்திட்டங்கள்
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்கல்விப் பிரிவுக்கு தனி மதிப்பும், அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகம் மட்டும் இந்த கல்வி முறையை கைவிட்டுள்ளது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்விப் பிரிவை கட்டாயமாக்கி, அதில் அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைவர்.
ஆசிரியர் நிரந்தரம்
ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தொழிற்கல்விப் பிரிவுக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். லாரன்ஸ் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 1996 லிருந்து 1999 வரை பணியமர்த்தப்பட்டவர்களில் பலருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு பணி நிரந்தரம் கிடைத்துள்ளது. ஆனால் தொடர்ந்து 1999 முதல் 2007 வரை பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவில்லை.
66 பாடப்பிரிவுகளாக துவங்கப்பட்ட தொழிற்கல்வி தற்போது 12 பாடப்பிரிவுகளாக மாறியுள்ளது. அதில் முக்கியமான கணினி ஆசிரியர் மற்றும், விவசாய ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வாணையத்தின் மூலம் வேலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை மற்ற அனைத்து பிரிவுகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.