Last Updated : 21 Jan, 2014 08:12 PM

 

Published : 21 Jan 2014 08:12 PM
Last Updated : 21 Jan 2014 08:12 PM

கோவை: வணிக வளாகத்தில் டாஸ்மாக்!

சமீபத்தில் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் வணிக வளாகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழக அரசின் சீரிய முயற்சிக்கு சவால் விடும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அரசுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, ஏலம் விடாமலேயே 6 கடைகள் டாஸ்மாக்கிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன.

பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ளது இந்திராகாந்தி வணிக வளாகம். 1992-ம் ஆண்டு கீழ் தளம் கட்டப்பட்டது. 2003-ல் மேற்கொண்டு தளங்களும், 72 கடைகளும் கட்டி, ஏல முறையில் வாடகைக்கு விடப்பட்டன. ஒருபுறம் பேருந்து நிலையம், மறுபுறம் வாரச் சந்தை என மக்கள் அதிகம் கூடும் இடம். நாளடைவில் வாரச் சந்தையை ஒட்டியுள்ள பகுதியில் கடைகள் அதிகம் திறக்கப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், அங்கு கடை (கடை எண் 1636) அமைத்து வியாபாரத்தை துவக்கியது. அன்று முதல் மக்களுக்கு பிரச்சினையும் தொடங்கியது.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி, 14 அடிக்கு 9 அடி என்ற வீதத்தில் சிறிய கடைகளில் பாட்டில்களை நிரப்பி வைத்துள்ளனர். இதேபோல் 6 கடைகளை எடுத்துள்ளனர். மக்கள் பயன்பாடு அதிகமுள்ள இப்பகுதி, தற்போது சமூக விரோதச் செயல்களுக்கு ஏற்ற இடமாக ‘டாஸ்மாக் கடை வளாகம்’ விளங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பெரியநாயக்கன்பாளையம், பாரதி நகர், குப்பிச்சிபாளையம், கஸ்தூரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் பகுதி. பழமையான மாரியம்மன் கோயில், வாரச் சந்தை, பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், வணிக வளாகம், தொலைபேசி நிலையம் உள்ளிட்டவற்றுடன் இந்த டாஸ்மாக் கடையும் அமைந்துள்ளது. எங்கும் இல்லாத வகையில், வணிக வளாகத்தின் ஒரு தளமே டாஸ்மாக் கடையாக மாற்றப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். தவறுதலாக அங்கு சென்ற பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு அரசியல்வாதிகள் விடுவதில்லை. இதனால் நாளுக்கு நாள் அங்கு நடக்கும் அத்துமீறல்கள் அதிகரிக்கின்றன என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நெடுஞ்சாலையோரங்களில் டாஸ்மாக் மதுக்கடை இருக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து 25 அடியில் இந்தக் கடை அமைந்துள்ளது. 6 கடைகளில் மதுக்கடையும், மதுக்கூடமும் உள்ளது. அனுமதியில்லாமல் மதுக்கூடங்கள் செயல்படுவதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் தீர்மானத்தின்படி, அந்தக் கடையை அகற்ற வேண்டுமென டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் மனு அளித்தோம். தினமும் ரூ.19 ஆயிரத்துக்கும் மேல் வருமானம் அளிக்கும் இந்தக் கடையை அகற்ற முடியாது என மறுத்துவிட்டனர் என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் அருண்குமார் கூறுகை யில், டாஸ்மாக் துவக்கும்போது, அப்போதைய ஆட்சியர் எங்களிடம் பேசி இங்கு கடை அமைத்தார். அதன்பிறகு ஏராளமான பிரச்சினைகள் நடந்து விட்டன. இதுதொடர்பாக நாங்களும் போராட்டங்களும் நடத்திவிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் மறுக்கின்றனர். தற்போதைய ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

நீதிமன்ற உத்தரவை மீறியும், டாஸ்மாக் விதிமுறைகளை மீறியும், பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலை புறக்கணிக்கும் வகையிலும், பொதுமக்களின் எதிர்ப்புகளுக் கிடையேயும், பல்வேறு சமூக விரோதச் செயல்களின் பிறப்பிடமாக இருக்கும் இந்த மதுபானக் கடையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x