Published : 18 Jan 2014 12:29 PM
Last Updated : 18 Jan 2014 12:29 PM

தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு கோஷத்தால் திசைமாறும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் மகிழ்ச்சி என்று கருணாநிதியும்

ஸ்டாலினும் வெளிப்படையாக தெரிவித்தனர். மேலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் விஜயகாந்தை சந்தித்து திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரும் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்து பேச்சு நடத்தினார். இதனால், காங்கிரஸுடன் தேமுதிக கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுந்தது. அடுத்த சில நாட்களில் கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார். இதையடுத்து திமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணிக்கு தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இது ஊழல் எதிர்ப்பு மாநாடாக நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது. ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்தையும் இப்போது அந்தக் கட்சியினர் உயர்த்திப் பிடித்துள்ளனர்.

ஊழல் ஒழிப்பு என்ற கோஷத்துடன் திமுக, காங்கிரஸுடன் கூட்டணி சேருவது சரியாக இருக்காது என தேமுதிக கருதுகிறது. அப்படி சேர்ந்தால், மற்ற கட்சிகள் தேமுதிகவை கடுமையாக விமர்சிக்கக் கூடும் என அக்கட்சித் தலைமை நினைக்கிறது. தற்போது திடீரென ஊழல் எதிர்ப்பு என்ற கோஷத்தை தேமுதிக கையில் எடுத்திருப்பதால், திமுக அல்லது காங்கிரஸுடன் அக்கட்சி கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதாகவே தெரிகிறது.

தேமுதிக தரப்பில் இருந்து பாஸிட்டிவான தகவல் வராததால்தான், ‘தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்நிலையில், திமுகவும் காங்கிரஸும் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு காலம் எங்கள் கூட்டணியில் திமுக இருந்துள்ளது. பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கும் கட்சிகளும் ஒருவருக்கொருவர் கூட்டணி தர்மப்படி ஆதரவளித்தன. தற்போது கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசிவிட்டு சென்ற பிறகு திமுக தரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி சேர மாட்டோம் என்று கருணாநிதி தெளிவாகக் கூறவில்லை. மீனவர் மற்றும் இலங்கைப் பிரச்சினைகள் தொடர்பாக கருணாநிதி எழுதிய சமீபகால கடிதங்களில், பெரும்பாலும் இலங்கை அரசு மற்றும் தமிழக அரசு மீதுதான் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் 2 ஜி வழக்கு விசாரணை நிலையைக் கருத்தில் கொண்டு மீண்டும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x