Last Updated : 08 Feb, 2014 02:50 PM

 

Published : 08 Feb 2014 02:50 PM
Last Updated : 08 Feb 2014 02:50 PM

கோவையைச் சுற்றிப் பயணிக்கும் நில அதிர்வுகள்: நிலநடுக்கம் இன்று115-வது ஆண்டு நினைவு நாள்

எந்த வளங்களும் இல்லாத ஊர் என புறக்கணிக்கப்பட்ட வரலாற்று அடிச்சுவடைக் கொண்டது கோயம்புத்தூர். ஆனால், இன்று தொழில்புரட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அனைத்துமே வளர்ச்சிதான் என்றாலும், இயற்கையை புறக்கணித்து எழுதப்பட்டு வரும் புதிய வரலாறுகளின் வீரியம் எத்தனை நாளுக்கு?

தொழில்நுட்பத்தின் வீச்சும் தாக்கமும் இந்த மண்ணை எப்படி எல்லாம் புரட்டிப் போடப் போகிறதோ என்ற அச்சம், சூழல் ஆர்வலர்களை ஆட்டிப்படைக்கிறது. கடந்த காலத்தை சிறிது திரும்பிப் பார்த்தால் அந்த அச்சத்தில் நிழல் நிஜமாகத் தெரிய வாய்ப்புள்ளது.

1900ம் ஆண்டு, பிப்.8ம் தேதி அதிகாலை 3.11 மணி. கோவையை ஒரு மிகப் பெரிய நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. நமது மூதாதையர்கள் ஏராளமானோரை இந்த நிலநடுக்கம் பலிகொண்டது. ரிக்டர் கருவி கண்டறியப்பட்ட பிறகு, தென்னிந்தியாவில் பதிவான மிகப் பெரிய நில நடுக்கம் இதுவே எனக் கூறப்படுகிறது. இன்று இச் சம்பவத்தின் 115வது நினைவு நாள்.

நிலநடுக்கம் குறித்த ஆய்வாளரான கேரளத்தைச் சேர்ந்த கே.சரவணக்குமார் கூறியது: சரியாக கோவை நகரிலிருந்து தென்மேற்கு திசையில் 29 கி.மீ தொலைவில் உள்ள தற்போதைய கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட சித்தூர், நல்லேப்பிள்ளி பகுதிகளை மையமாகக் கொண்டு, சுமார் 25 ஆயிரம் சதுர கி.மீ தூரத்திற்கு, இந்த நிலநடுக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி, திருச்சூர், கோட்டயம், பெருந்துறை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன.

14 ஆயிரம் பேர் பலி

கோவை டவுன்ஹாலில் மட்டும் 31 உயிரிழப்புகளும், மொத்த பரப்பளவில் 14 ஆயிரம் பேர் இறந்திருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கேரள அரசாங்கப் பதிவுகளும், அன்றைய நாளிதழ்களும் பதிவு செய்துள்ளன. இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் மலையாள மனோரமா நாளிதழ்களிலும் இச் சம்பவம் பதிவாகியுள்ளது. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இதற்கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாசாவின் நில அதிர்வு ஆய்வு மையம் இந்தப் பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாபா அணுசக்தி ஆய்வு மைய விஞ்ஞானி டி.எம்.மகாதேவன் கோயம்புத்தூர் - நல்லேபள்ளி நிலநடுக்கம் தொடர்பாக புத்தகம் எழுதியுள்ளார். அவரது ஆய்வறிக்கையில் 30 அடி ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு எனக் கூறுகிறார்.

அதன்பின் வெகு நாள் வாழத் தகுதியற்ற நகராக உருமாறிய கோவை, பின்னர் பிளேக், பஞ்சம் என பல சவால்களை சந்தித்துள்ளது. பலவீனமான புவியியல் அமைப்பு மட்டுமே இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்கிறது நில நடுக்க ஆய்வுகள். ஒரு முறை நில அதிர்வு ஏற்பட்டால், நிச்சயம் 100 வருடங்களை மையமாக வைத்து 30 வருடங்கள் முன்போ, 30 வருடங்களுக்குப் பின்போ மற்றொரு பாதிப்பு ஏற்படும் எனக் கூறுகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது நாம் சரியாக இன்றுடன் 115வது வருடத்தில் பயணிக்கிறோம்.

சுனாமி போன்ற பாதிப்பில்லாத மாவட்டமாக கோவை இருந்தாலும், புவியியல் சார்ந்த பல கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன. கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கின்றன என்றார்.

முன்னெச்சரிக்கை அளவீடு

இது நில நடுக்கம் குறித்த பயமுறுத்தல் அல்ல. முன்னெச்சரிக்கைகளை நாம் எந்த அளவில் பின்பற்றுகிறோம் என்பதை சுய மதிப்பீடு செய்ய வேண்டிய தருணம்.

புறக்கணிக்கப்பட முடியாததாக கட்டுமானமும், தொழில்நுட்பமும் மாறிவிட்டது. இயற்கை வளத்தை காக்க வேண்டும். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாரான சூழல் நம்மிடம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதே பாதிப்புப் பதிவுகளைக் கொண்ட கேரளத்தில், `இயர்லி வார்னிங் சிஸ்டம்' என்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

குறையுமா அத்துமீறல்கள்?

குஜராத் உள்ளிட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில், தற்போது கட்டிடங்களின் அளவுகள் கட்டாய வரைமுறையாகிவிட்டன. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை. இயற்கையை சீரழிக்கும் நிலைக்கு எல்லை தேவை. கட்டாயத்தால் மாற்றப்படும் இயற்கை வழித்தடங்களை தவிர்த்து, சுய லாபத்திற்காகவும், அபரிமித வளர்ச்சிக்காகவும் மாற்றப்படும் இயற்கை அத்துமீறல்களை அனுமதிக்கக்கூடாது.

சிக்கலான நேரங்களில் மின்சாரமும், தொலைதொடர்பும் செயலற்றுவிடும். ஆனால், நாம் பழமை என ஒதுக்கித்தள்ளிய ரேடியோ கதிர்களுக்கு, சிக்கல்களை சமாளிக்கும் திறன் உண்டு. அதனை ஆபத்துக் கால நண்பனாக பேணுவது அவசியம்.

பல நாடுகளில் முக்கியமாகக் கருதும் வீட்டு விலங்குகள் இந்த பிரச்சினையில் மிகப் பெரிய உதவியாக இருக்கும். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நிலநடுக்கத்தை தாங்கி விரிசலே விடாத கட்டிடங்களை உருவாக்க முடியாத வரை, முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை. அதற்கு அரசு நிர்வாகங்களின் செயலாக்கமும், பொதுமக்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் நிச்சயம் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x