Published : 27 Jan 2014 06:28 PM
Last Updated : 27 Jan 2014 06:28 PM

திருப்பூர்: ஆற்றுப்படுகையில் கரையும் புராதன சின்னங்கள்!

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப்படுகையில் பராமரிப்பின்றி சிதைக்கப்படும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் எம்.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாராபுரம் வட்டம், அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழுள்ள பகுதிகளில் வரலாற்று சின்னங்கள் புதைந்து கிடப்பதாகவும், அதனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தில் தொல்லியல் ஆய்வாளராக பணிபுரிந்த எம்.வெங்கடேசன் களப்பணியில் ஈடுபட்டார். இதில், பல்வேறு சாம்ராஜ்யங்களின்கீழ் தாராபுரம் பகுதி ஆட்சி செய்யப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால், புராதன சின்னங்களின் மதிப்பு தெரியாமல் அதனை சிதைத்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், உலக நாகரீக வளர்ச்சி ஆற்றங்கரைகளில்தான் தொடங்கியது என்பதற்கான மற்றொரு சான்றாக திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தாராபுரம் திகழ்கிறது. தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றுப்படுகையில் வரலாற்று சுவடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மனிதனின் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், கி.பி.8-ம் நூற்றாண்டை சேர்ந்த கற் சிலைகள் மற்றும் சிதைந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நதிக்கரையில் நாகரீகம் தோன்றியதற்கான சான்றாக உள்ளன.

3 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட 8 கைகளுடன் கூடிய பாண்டியர் கால கலைநுட்பத்தின் காளி சிற்பம் கிடைத்துள்ளது. இதன் அருகிலேயே நுண்ணிய கலைநுட்பத்துடன் கிடைத்த பூதச் சிற்பம், பழங்கால மக்களின் சிற்பக்கலையை எடுத்துரைக்கிறது.

இதேபோல் 14, 15-ம் நூற்றாண்டுகளுக்குட்பட்ட கல் தூண்களும், ஆற்றின் எதிரே அரை கி.மீ. தொலைவில் சாமுண்டீஸ்வரி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்தபோது, குப்தர் காலத்திற்குட்பட்ட உதயகிரி மலைச் சிற்பத்தின் கலை நுணுக்கத்தில் உள்ளதுபோல் காணப்படுகிறது.

மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தும், வலது காதில் இயற்கைக்கு மாறாக மனித உருவத்தையே காதணியாக அணிந்தும் அர்த்த பத்மாஷண நிலையில் சிற்பம் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தில் இளையவள் என்று குறிப்பிடப்படும் சாமுண்டீஸ்வரியை, கர்நாடக உடையார் வம்சத்தினர் இன்றும் குலதெய்வமாக வழிபடுகின்றனர் என்றார்.

கண்டறியப்பட்ட சான்றுகளை வைத்து பார்க்கும்போது, பல மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக தாராபுரம் விளங்கியுள்ளது தெரிய வருகிறது. சிதைக்கப்படும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தாராபுரம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அமராவதி ஆற்றுப்படுகையி லுள்ள அகரம் பள்ளி முதல்வரும், அகரம் பண்பாட்டு மையத் தலைவருமான கீரிஷ் ஜெ.நாயர், தொல்லியல் ஆய்வாளர் எம்.வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x