

கன்னியாகுமரி மாவட்டத்தில், இயற்கை விளை பொருட்களை சந்தைப்படுத்த வசதியாக, ‘நமது நெல்லை காப்போம். இயற்கை வேளாண்மை உழவர்கள் குழுமம்’ என்ற அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில், 60 நாளில் விளைச் சலைத் தருகின்ற, அறுபதாம் குறுவை தொடங்கி, ஏராளமான பாரம்பரிய நெல் ரகங்கள் குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
சாகுபடி பரப்பு சரிவு
விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையின்மை, பருவ நிலை மாற்றம், உரங்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் நெல் சாகுபடி பரப்பு சரிந்து வருகிறது. அதே நேரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அரசு கொள்முதல் நிலையங்களில் கொள் முதல் செய்வதும் இல்லை.இந்த சூழ்நிலையில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்தவர்கள் எங்கே சந்தைபடுத்துவது? என்று தெரியாமல் குழப்பம் அடைந்து, இடைத்தரகர்களிடம் நெல்லை விற்று வந்தனர்.
இந்த நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்கும் வகையில், குமரி மாவட்ட இயற்கை விவசாயிகளுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை காட்டியிருக்கிறது. குமரி மாவட்டத்தில், ‘நமது நெல்லை காப்போம். இயற்கை வேளாண்மை உழவர்கள் குழுமம்’ என்ற அமைப்பு தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் சுடர் விட இருக்கிறது.
இடைத்தரகர்கள் இம்சை
இதுகுறித்து, ‘கிரியேட்’ அமைப்பு மேலாண்மை இயக்குநர் பொன்னம்பலம் கூறியதாவது:
‘நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பு தமிழகம், கர்நாடகா, கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் தான் இந்த பணியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் இயற்கை வழி வேளாண் குறித்த பரப்புரையில் ஈடுபட்டதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான பேர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் அவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான விஷயங்கள் தெரியவில்லை. அதன் காரணமாக இடைத்தர கர்கள் புகுந்தனர். இயற்கை விவசாயத்துக்கு ஒருவர் மாறினால், தொடக்கத்தில் கூடுதல் மகசூல் கிடைக்காது. இயற்கை விவசாயத்துக்கு மண் பழக்கப்படவே 3 ஆண்டுகள் பிடிக்கும். அந்த சூழலிலும் மண்ணை மலடாக்க கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய விலை கிடைக்காத ஆதங்கத்தில்தான் இந்த அமைப்பை தொடங்கியிருக்கி றோம் என்றார் அவர்.
சிண்டிகேட் பாதிப்பு
இந்த வடிவமைப்பு பணிக்காக, தட்டிமேடு பகுதியில் இருந்து வந்திருந்த, ‘கிரியேட்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியதாவது:
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நெல் ரகங்களுக்கு அரசு கொள்முதல் மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை. வெளியே விவசாயிகளின் நெல்லை சில முதலாளிகள் சிண்டிகேட் அமைத்து லாபம் பார்த்து விடுகின்றனர்.
இதை தவிர்க்க, விவசாயிகளை யும், நுகர்வோரையும் ஒருங்கிணை ப்பு செய்வதே எங்கள் நோக்கம்.இந்த அமைப்பில் இயற்கை வழி வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை அங்காடிகளையும், இயற்கை விவசாயிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறோம். குமரி மாவட்டத்தில் அது சாத்தியமாகி விட்டது.
இதன் மூலம் இடைத்தரகர் இம்சையில் இருந்து விவசாயிகள் விடுபட்டிருக்கிறார்கள். சிண்டி கேட்டுக்கும் இனி இடம் இல்லை என்றார் அவர்.
புதிய மாற்றம்
இயற்கை விளை பொருட்களை சந்தைபடுத்தும் நாகர்கோவில் கெளதமன் கூறியதாவது:
இயற்கையில் விளைந்த நெல் தொடங்கி, காய்கறிகள் வரை அனைத்தையும் நேரடியாக கொள்முதல் செய்யத் தயாராக இருக்கிறேன். இயற்கை விளை பொருட்களுக்கு நல்ல விலையும் கொடுத்து வருகிறேன். ஆனாலும், இடைத்தரகர்களே நேற்று வரை என்னோடு தொடர்பில் இருந்தார்கள். இப்போது தான் முதல் முறையாக விவசாயிகளையும், இந்த கூட்டத்தின் மூலம் பார்த்தேன்”என்றார்.