

உலகப்புகழ் பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிக காளைகளை அடக்கிய நபருக்கான ‘மேன் ஆஃப் தி ஜல்லிக்கட்டு’ பரிசுக்கு மதுரை மாநகர ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றும் ந.வினோத்ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஹோண்டா பைக் பரிசாக வழங்கப்பட்டது.
இதுபற்றி ந.வினோத்ராஜ் ‘தி இந்து’ நிருபருக்கு அளித்த பேட்டி:
‘மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள வீரபாண்டி எனது சொந்த ஊர். 2008 முதல் மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். தந்தை நவநீதன் சேர்வையும் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
ஆரம்ப காலத்திலிருந்து, எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். தற்போது 5 காளைகள் உள்ளன. எனவே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அனைத்து ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் சென்று வருகிறேன். 20 வயதுக்குப் பிறகு காளைகளை அடக்கவும் கற்றுக்கொண்டேன். ஒரே மகனான நான், ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஊர் ஊராகச் சென்றது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. கண்டித்து பார்த்தனர். முடியவில்லை. எனவே என் போக்கில் விட்டுவிட்டனர்.
பெரும்பாலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு சொந்தமாக காளைகள் இருக்கும். எனவே நான் மாடு பிடிப்பதை பார்த்துவிட்டு, மற்றவர்கள் என் மாட்டைத் தொடுவதற்கு பயப்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று வருகிறேன். வேகமாக ஓடும் காளைகளை விட, நின்று பாயும்
குத்து மாடுகளை அடக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். காளைகளை கண்டுவிட்டால் பொங்கிவிடுவேன். காளைகளை அடக்கும்போது கால்களை பின்னுவதோ, கொம்பைப் பிடித்து இழுப்பதோ எனக்கு பிடிக்காது. அவ்வாறு செய்தால் காளைகளின் வேகம் அதிகமாகி, மூர்க்கத்தனமாக தாக்கத் தொடங்கிவிடும். எனவே காளைகளைத் துன்புறுத்தாமல், அவற்றின் வழியிலேயே சென்று அடக்க வேண்டும். நான் அடக்கும்போது அதே காளையை மற்றொருவர் பிடித்துவிட்டால், உடனே நான் அந்த காளையை விட்டுவிடுவேன்.
வாடிவாசலில் இருந்து வெளியே றும் காளைகள் குறைந்தபட்சம் 50 கி.மீ. வேகத்தில் வெளியேறும். அதற்கேற்ப நாம் தயாராகி, தாவிச்சென்று காளைகளின் திமிலைப் பற்றவேண்டும். இந்தக் காளையை அடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்த அத்தனை காளைகளையும் பிடித்துவிட்டேன். என் முயற்சி ஒருபோதும் தோற்றதில்லை.’
இவ்வாறு ந.வினோத்ராஜ் தெரிவித்தார்.
சிறந்த காளையே இல்லையா?
ஜல்லிக்கட்டில் நின்று பாயும் சிறந்த காளைக்கு ஹோண்டா பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பைக்கும் ஜல்லிக்கட்டு மைதான மேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு காளைகூட சரியாக நின்று பாயவில்லை எனக் கூறி அந்த பைக்கை யாருக்கும் வழங்கவில்லை. 588 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் ஒன்றைக்கூட சிறந்ததாக தேர்வு செய்ய முடியவில்லையா என காளை உரிமையாளர்கள் ஆதங்கப்பட்டனர்.
தங்கக் காசு, வெள்ளிக் காசு, அண்டா... எல்லாம் போச்சே!
வினோத்ராஜ் மேலும் கூறுகையில், 'அலங்காநல்லூரில் பங்கேற்க விடுப்பு எடுத்து வந்திருந்தேன். இங்கு 13 காளைகளை அடக்கியதற்காக எனக்கு பைக் பரிசாக கிடைத்துள்ளது. இதுபோல மேலும் பல பரிசு களைப் பெற்றேன். ஆனால் அவற்றை கொடுத்து வைத்திருக்க, நம்பகமான நபர்களை அழைத்துச் செல்லாததால், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலரிடம் பரிசுகளைக் கொடுத்து வைத்திருந்தேன். இதில் பலவற்றை என்னிடம் தராமல் கொண்டு சென்று விட்டனர். கடைசியாக, 1 தங்கக்காசு, 4 வெள்ளிக்காசு, 4 அண்டா, 1 டிராவல் பேக், 1 கட்டில், 1 பீரோ, 11 சாதா பேக், 11 கிப்ட் பாக்ஸ், 1 சைக்கிள் ஆகியன என் கைக்கு கிடைத்துள்ளன. கிடைக்காமல் போன பரிசுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை' என்றார்.