Last Updated : 13 Apr, 2017 01:37 PM

 

Published : 13 Apr 2017 01:37 PM
Last Updated : 13 Apr 2017 01:37 PM

5 கேள்விகள் 5 பதில்கள்: நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும்!

எம்சிஏ பட்டதாரியான எஸ்.திருச்செல்வம், விவசாயிகளின் பிரச்சினைக்குத் தகவல் தொழில்நுட்பம் வாயிலாகத் தீர்வு காண முயல்பவர். ஆந்திரத்தில் செயல்படுத்தப்பட்ட இவரது திட்டம், தமிழகத்தில் அரசின் ஒப்புதலுக்காகக் காத்துக் கிடக்கிறது. விவசாயிகளின் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் சூழலில் அவருடன் ஒரு பேட்டி...

விவசாயிகளின் பிரச்சினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பயிரிடத் திட்டமிடுவதில் தொடங்கி, மழை பொய்த்தல், வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் தட்டுப்பாடு, விளை பொருட்களின் விலைச் சரிவு வரை நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு இட்லிக் கடை போடுவதற்குக் கடன் கேட்டாலே ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள் வங்கி மேலாளர்கள். விவசாயிகளின் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அவர்களுக்குக் கடன் பரிந்துரைப்பது நிரந்தரத் தீர்வாகாது.

இதற்கு நீங்கள் முன்வைக்கிற தீர்வு?

ஒவ்வொரு கிராமத்திலும் அரசு உதவியோடு தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம். அங்கே ஒரு கணினி, ‘பிரிண்டர்’, இணைய இணைப்பு, படித்த உள்ளூர் இளைஞர்கள் இருவர் இருந்தால் போதும். உள்ளூர், வெளியூர் விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், வியாபாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் ஆகியோருக்கிடையேயான பாலமாக அது செயல்படும். இந்தப் பயிர், இந்த வாரத்தில் அறுவடைக்கு வரும் என்று நாம் முன்கூட்டியே வியாபாரிகளுக்குத் தெரிவித்து, அலைச்சலின்றி நல்ல விலைக்கு விற்க முடியும்.

நெல் உள்ளிட்ட விளைபொருட்களின் விலையை தமிழ்நாடு வேளாண் பல்கலை இணையதளத்திலேயே பார்த்துவிடலாமே?

வெறும் தகவல் மட்டும் தருவது வேறு, தொடர்பை ஏற்படுத்தித் தருவது வேறு. உதாரணமாக, ஆந்திரத்தில் கிராமம் கிராமமாகச் சென்ற வேளாண் அதிகாரிகள், ‘துவரையில் இதுவரை பயிரிட்ட, எல்ஆர்ஜி- 30 ரகத்துக்குப் பதில் எல்ஆர்ஜி - 41 பயிரிடுங்கள்.. விளைச்சல் அதிகரிக்கும்’ என்று தகவல் தந்தார்கள். ஆனால், ‘நாங்கள் நிலக்கடலைதான் சாகுபடி செய்கிறோம். ஊடுபயிராகத் துவரை போட 250 கிராம் விதை போதும். அதை வாங்குவதற்கு யாராவது 75 கி.மீ. தள்ளியுள்ள கடப்பாவுக்குப் போவார்களா?’ என்று யாரும் அதைப் பயிரிட முன்வரவில்லை. தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் இருந்தால், மொத்தமாக இவ்வளவு விதை என்று வரவழைத்து, விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்க முடியும். இதேபோல விளைபொருட்களையும் மொத்தமாகச் சேகரித்து, வியாபாரிகளை ஊருக்கே வரவழைத்து விற்பனை செய்ய முடியும்.

களத்தில் இதைப் பரிசோதித்திருக்கிறீர்களா?

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தன்னுடைய சொந்த ஊராட்சி ஒன்றியத்தில் (கடப்பா மாவட்டம், புலிவேந்திலா ஒன்றியம்) 2004 முதல் 2006 வரை இத்திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார். இது அவருக்குத் தனிப்பட்ட முறையில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அடுத்ததாக, கடப்பா மாவட்டம் முழுவதும் 2007 முதல் 2010 வரை செயல்படுத்த ரூ.64 கோடியில் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத அவரது மறைவு, ஆட்சி மாற்றம், தெலங்கானா போராட்டம் போன்றவற்றால் இத்திட்டத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது.

இத்திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த முயற்சிக்கவில்லையா?

2000-ல் இருந்தே வேளாண் துறைச் செயலாளர்களின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுசென்றும், திட்டத்துக்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் தன் கனவுத் திட்டமாக அறிவித்திருக்கும் பிரதமருக்கும் மின்னஞ்சல், இணையதளம் வழியாகத் தகவல் அனுப்பினோம். அவை அவரது கவனத்துக்குச் சென்றதாகத் தகவல் இல்லை. அரசை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வேப்பங்குளம் கிராமத்தில் நாங்களே இச்சேவையை ஜூனில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம். விவசாயிகளின் ஒத்துழைப்பை நாடியிருக்கிறோம். அந்த வெற்றியைப் பார்த்தாவது, அரசு இத்திட்டத்தை ஏற்கும் என்று நம்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x