

கூடலூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பை, மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வது கூடலூர் அரசு மருத்துவமனை.
128 படுக்கைகள், 14 மருத்துவ பணியிடங்கள் உள்ளன. தற்போது 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 10 மருத்துவர்களில் சுழற்சிப் பணி மற்றும் பிற காரணங்களால் 6 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
கூடலூரையொட்டி கேரள மாநிலம் அமைந்துள்ளதால், பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு கேரளா செல்கின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், சாதாரண நோய்களை தவிர பிற நோய்களுக்கு சிகிச்சை பெற உதகை, கோவைக்கு நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர். மேலும், மருத்துவ அலுவலர்கள், ஊழியர்களிடையே மோதல் போக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவக் கழிவுகள்
மருத்துவமனை வளாகத்தைச் பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இந்தச் செடிகள் உடலில் பட்டால் சரும நோய்கள் ஏற்படும். மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் வளாகத்திலேயே எரிக்கப்படுகின்றன. இதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க தனி வாகனம் இயக்கப்படுகிறது. இதில் சேகரிக்கப்படும் கழிவுகள் தனியாக எரிக்கப்படும்.
ஆனால், கூடலூர் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஊழியர்கள் எரிக்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மூச்சு திணறல், சுவாச கோளாறு ஏற்படுவதுடன், அறுவைச்சிகிச்சை செய்துள்ள நோயாளிகளுக்கு இருமலும் ஏற்பட்டு தையல் பிரியும் நிலை உள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை பொறுப்பாளர் சந்திரபாபு கூறுகையில், 4 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பணியமர்த்தப்படுவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறது. மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.