

மேட்டூர் காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஆய வலைகளை சிலர் பயன்படுத்தி, வளர்ப்புக்கு விடப்படும் மீன் குஞ்சுகளை அள்ளி எடுப்பதால், மீன் வளம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால்,மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, 2 மாநிலங்களில் குடிநீர் தேவையையும், விவசாயத்தை செழிக்க வைக்கும் வற்றா ஜீவ நதியாக விளங்குகிறது. விவசாய தொழில் மட்டுமின்றி காவிரி கரையோர மக்கள் மீன்பிடி தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். தமிழகத்தில் மேட்டூர் அணை மற்றும் நீர் தேக்கப் பகுதியில் மீன் பிடித் தொழிலை நம்பி 2000 குடும்பங்கள் உள்ளன. மேட்டூர் அணைக்கட்டு பகுதியில் மீன் பிடிக்க மீன் வளத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
மேட்டூர் மீனுக்கு ருசி அதிகம்மீனவர்களிடமிருந்து மீன் கூட்டுறவு சங்கம் மூலம் மீன்கள் கொள்முதல் செய்து, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அனுமதி பெறாத ஏராளமானோர் மீன் பிடித்து வருவதாகவும், இவர்கள் மீது மீன் வளத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மீன் வளம் பெருக மீன் குஞ்சுகள் விடுவது வழக்கம். மேட்டூர் அணையில் நீர் மட்டம் 75 அடியாக இருந்த போது, மீன் வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
முதல் தர மீன் வகைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகியவையும், இரண்டாம் தரமான அரஞ்சாண், ஜிலேபி, கெழுத்தி, எட்டர் பிளஸ் உள்ளிட்ட மீன்களும் உள்ளன. உள்ளூர் விற்பனையை காட்டிலும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு மேட்டூர் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மேட்டூர் அணையைத் தவிர பண்ணவாடி, மூலக்காடு, திப்பம்பட்டி, கீரக்காரனூர், மாசிலாம்பாளையம், பூனாண்டியூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் தினமும் 1000 முதல் 2000 கிலோ எடையுள்ள மீன்களை பிடித்துகூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்வார்கள். இந்நிலையில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்கள் தடை செய்யப்பட்ட ஆய வலையை பயன்படுத்தி, மீன்களுடன் வளர்ப்புக்கு விடப்பட்ட குஞ்சுகளை சேர்த்து அள்ளி காசுபார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால், காவரி ஆற்றில் 70 சதவீதம் மீன் வளம் குறைந்து மீனவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தடைசெய்யப்பட்ட ஆய வலைகள் 300 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. மீன் வலையின் ஒரு முனையை ஒரு பரிசலில் இருப்பவரும், மறு முனையை மற்றொரு பரிசலில் இருப்பவரும் பிடித்துக்கொண்டு சுமார் 300 மீட்டர் ஆற்றில் செல்வார்கள். பின் இருவரும் ஒன்று சேர்ந்து வலையை எடுக்கும்போது பெரிய மீன்களுடன், மீன் குஞ்சுகளும் அதிகளவில் சிக்கி கொள்ளும். மீன் குஞ்சுகளை கருவாடாக்கி விற்கின்றனர்.
இதனால், மீன் வளம் குறைந்து, தினமும் 300 முதல் 400 கிலோ மீன் வரை மட்டுமே சிக்குகிறது. இதனால் அனுமதி பெற்ற மீனவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கண்காணிப்பு அவசியம் இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய வலை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 5 கண்காணிப்பு படகு வைத்துள்ளனர். ஆனால், பெயருக்கு எப்போதாவது ஒரு முறை ஆய்வுசெய்து, வலையை பறிமுதல் செய்வதுடன் நடவடிக்கையை முடித்துக் கொள்கின்றனர். இதனால், ஆய வலையைப் பயன்படுத்தும் கும்பலின் அட்டூழியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீன் குஞ்சுகள் அள்ளிச் செல்லும் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்” என்றனர்.