Last Updated : 20 Nov, 2013 07:04 PM

 

Published : 20 Nov 2013 07:04 PM
Last Updated : 20 Nov 2013 07:04 PM

நெல்லை: நாளொரு கொலை, பொழுதொரு திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் என்றாலே, நாளும் ஒரு கொலை நடக்கும் என்று, தமிழகமே சொல்வதற்கு கட்டியம் கூறும் வகையிலான நிகழ்வுகள், சமீப நாட்களாக நடைபெறுகின்றன. கொலை சம்பவங்களுக்கு போட்டிபோட்டு திருட்டுகளும் அரங்கேறி வருகின்றன.

‘நெல்லை’ என்ற பெயரில் ‘நெல்’ என்பதற்கு பதிலாக ‘கொல்’ என்று அழைக்கும் வகையில், இம்மாவட்டத்தின் மீது படியும் ரத்தக்கறையை போக்க என்ன செய்வது என்பது தெரியாமல் போலீஸாரே விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

வற்றாத தாமிரவருணியால் நெல் விவசாயத்துக்கு பெயர் பெற்ற இம்மாவட்டத்தில், ஆண்டாண்டு காலமாக கார், முன்கார், பிசானம் என்று முப்போகம் விளைந்திருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்ததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.

அன்றாட நிகழ்வு

20 ஆண்டுகளுக்குமுன் இம்மாவட்டத்தில் கொலை நடப்பதே அபூர்வமானதாக இருந்தது. ஆனால், 1990-களில் சாதி மோதல்களால் கொலை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகியிருந்தன. பின்னர் படிப்படியாக அதுவும் குறைந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் கொலை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கின்றன. தொழில் போட்டி, குடும்ப தகராறு, கள்ளக்காதல் விவகாரம் என, பல்வேறு காரணங்களால் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. தினமும் எங்காவது ஒரு கொலை சம்பவம் பதிவாகிறது. நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ந்துவரும் சூழ்நிலையில் மூர்க்கத்தனத்துடனும், அரக்கத்தன த்துடனும் இங்கு கொலைகள் அரங்கேறி வருகின்றன.

சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்:

திருநெல்வேலி அருகே முனைஞ்சிப்பட்டி பகுதியில் சு. இசக்கிதாஸ் (13) என்ற பள்ளி மாணவர், ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல் தலைதுண்டித்து கொலை, கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை என்றெல்லாம் பல பரிதாபங்கள் சமீபத்தில் நிழந்திருக்கின்றன.

‘மாப்ளே’ என்றதால்…!

தாழையூத்து அருகே கடந்த 12-ம் தேதி இரவில் ராஜ் (39) என்ற விவசாயி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னத்துரை என்பவர் போலீஸில் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்க வைத்திருக்கிறது. தன்னை மாப்ளே என்று கூறியதால் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததாக சின்னத்துரை வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் கொலை நடக்குமா? என்று கேள்வி எழுகிறது. இது, இம்மாவட்டத்தின் மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது.

இம்மாவட்டத்தில் குக்கிராமங்களும் சாதிய அடையாளத்துக்குள் வந்திருப்பது குறித்து, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் மேயர் விஜிலாசத்தியானந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் வேதனையுடன் பேசினர். வாடகை கொலையாளிகள் இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வது ஏற்கெனவே இம்மாவட்டத்தின் மீது கறைபடியச் செய்திருக்கிறது. இந்நிலையில் நாளொரு கொலை சம்பவங்கள் மாவட்டத்தின் மீது ரத்தக்கறையை படிய வைத்திருக்கிறது. இதை தடுக்க வழி தேடாவிட்டால், திருநெல்வேலி மாவட்டத்தின் மீதான ரத்தக்கறை, கல்வெட்டாக பதிந்துவிடும்.

ஆயிரம் சவரன் திருட்டு:

திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும், 6 மாதங்களாகவே பூட்டிய வீடுகளில் திருட்டு என்பது சர்வ சாதாரண நிகழ்வாகவே மாறியிருக்கிறது. ஆயிரம் சவரனுக்குமேல் இதுவரை நகைகள் திருடப்பட்டிருப்பதாக, காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இச் சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யாமல் இருப்பது, பொதுமக்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரிகள் சுணங்கி போயிருப்பது குறித்து, பொதுமக்களே கேள்வி எழுப்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x