

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கான காலாண்டு ஊக்க ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்க ஊதியம் தொடர்பான ஒப்பந்தத்தின் காலவரம்பை நீட்டிக்கக்கூடாது என வலியுறுத்தித் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகச் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் செயலர் வேல்முருகன் தெரிவித்தார்.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்குக் காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்பட்ட ஊக்க ஊதியமும், உற்பத்தியுடன் இணைந்த ஆண்டு ஊக்க ஊதியம் போனஸ் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 5ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கடந்த 31.12.2011 அன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட ஊக்கஊதியம் 01.01.12 முதல் வழங்கப்பட வேண்டும்.
இருப்பினும் புதிய ஒப்பந்தம் தொடர்பாக நிர்வாகத்துக்கும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச மற்றும் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் 29.05.13 முதல் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாகக் கடந்த 5.9.13 அன்று சென்னையில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஒப்பந்தம் 5 ஆண்டுகாலம் எனக் காலவரையறையும், 143 சதவீத ஊக்க ஊதிய உயர்வும் என முக்கிய ஷரத்துகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்துப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் எனவும் அதன்படி காலவரையறையை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக உயர்த்தினால் மட்டுமே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் ஒப்புதல் அளிக்கும் என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
இதையடுத்து மத்தியத் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதனிடையே நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை,ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவின்படி ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள் என்பதை மாற்றம் செய்யக்கூடாது எனவும், தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கக் கூடாது என வலியுறுத்தித் தொழிலாளர்களிடம் இன்றுமுதல் கையெழுத்து இயக்கம் நடத்தவிருப்பதாகச் சி.ஐ.டி.யு தொழிற்சங்கச் செயலர் வேல்முருகன் தெரிவித்தார்.