

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகியும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நாடோடிகளாகவே வாழ்ந்து வரும் அவலநிலை தொடர்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7.5 லட்சம். இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர்.
இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.
இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகியும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளா வாழ்ந்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் இவர்கள், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மூங்கில் மரங்களில் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இயற்கையோடு இசைந்து வாழ்ந்து வந்த இவர்கள், தங்கள் கலாச்சாரத்தைத் தொடர முடியாமலும், வெளி உலகத்துடன் ஒன்றிணைய முடியாமலும் தவித்து வருகின்றனர். கடும், மழை, காற்றுக்கு இடையே எப்போது விழும் என்ற சூழலில் உள்ள வீடுகளுக்கு பதிலாக நகரங்களை ஒட்டியுள்ள சில கிராமங்களில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இருள் சூழ்ந்திருந்த இவர்களின் வாழ்வில், கடந்த திமுக ஆட்சியின்போதுதான் இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தின்கீழ், சில பழங்குடியின கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பதால் மின்சாரம், சாலை வசதிகள் ஏற்படுத்தவும், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் வனச் சட்டங்கள் முட்டுகட்டையாக உள்ளன.
பாதுகாப்பு இல்லாததால் நாடோடி வாழ்க்கை
பந்தலூர் அருகே சேரம்பாடியில் சேரங்கோடு ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே அமைந்துள்ள காட்டு நாயக்கர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், யானைகள் தொல்லையால் கிராமத்தை காலி செய்து கேரளா மாநிலத்துக்கு பிழைப்பு தேடிச் சென்றனர். ஆனால் அங்கும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கே திரும்பி வந்தனர். தற்போது 7 குடியிருப்புகளில் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
பிளாஸ்டிக் மேற்கூரை, மூங்கில் தப்பைகளால் அமைக்கப்பட்ட சுவர் என எப்போது விழுமோ என்ற பயத்துடன் கூடிய குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு மின்சாரம், குடிநீர், நடைபாதை என எந்த வசதிகளும் இல்லை. தேன் எடுப்பதுடன், கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு, அரசின் தொகுப்பு வீடுகூட கட்டித்தர இயலாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் இந்த காலனிக்கு வந்து வாக்குறுதிகள் தருவதோடு, கடமையை நிறைவு செய்து விடுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்கையில், தனியார் எஸ்டேட் நிர்வாகம் தடை விதிப்பதால், தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்து விடுகின்றனர்.
காடுகளில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட காட்டு நாயக்கர் இன மக்கள், யானைகள் தொல்லையால் இரவு நேரங்களில் வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த நிலை எவ்வளவு நாள்களுக்கு என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் அதிகாரிகள் வாக்குறுதிகளை அளித்து வருவதால், எங்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையாக மாறிவிட்டது என்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.