Published : 12 Feb 2014 06:37 PM
Last Updated : 12 Feb 2014 06:37 PM

திண்டுக்கல்: தலை வாழை சாப்பாடு தலைமறைவு: பிளாஸ்டிக் பேப்பரில்தான் விருந்தோம்பல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியால் ஒரு கட்டு வாழை இலை ரூ.3,800-க்கு வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளதால், வீட்டு விசேஷங்களில் விருந்தினர்களை உபசரிக்கும் தலைவாழை சாப்பாடு தலைமறைவாகி வருகிறது. உணவகங்கள் முதல் வீட்டு விசேஷங்கள் வரை பிளாஸ்டிக் பேப்பரில்தான் உணவு பரிமாறும் புது கலாச்சாரம் பரவுவதால், சுகாதாரமும், சுற்றுச்சுழலும் மாசு அடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். இந்த மாவட்டத்தில் சிறுமலை, வத்தலகுண்டு, விராலிப்பட்டி, ஆத்தூர், பழனி, கே.சி.பட்டி, ரெட்டியார்சத்திரம், மணலூர், காமனூர் மற்றும் பெருமாள்மலை உள்பட பரவலாக 5,171 ஹெக்டேரில் வாழை விவசாயம் நடைபெற்றது.

பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி

திண்டுக்கல் வாழைத்தார், வாழை இலைகளுக்கு உள்ளூர், வெளியூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், இங்கு உற்பத்தியாகும் வாழைத்தார், வாழை இலை ஆகியன தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 836 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் 400 மி.மீ. மழை மட்டுமே பெய்கிறது. இதனால் வறட்சி காரணமாக வாழை சாகுபடி பரபரப்பு 60 சதவீதம் அழிந்துவிட்டது.

அதனால், உள்ளூர், வெளியூர் சந்தைகளில் வாழைத்தாரைத் தொடர்ந்து வாழை இலைகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வத்தலகுண்டு வாழை இலை சந்தையில் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு பூவன் வாழை இலை ரூ. 3800-க்கு விற்பனையானது.

சாப்பாட்டுக்கு பூவன்வாழை இலை, நாட்டுவாழை இலை, கற்பூரவள்ளி வாழை, ரஸ்தாலி வாழை இலை ஆகிய நான்கு வாழை இலைகள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டல்களில் டிபன் சாப்பாட்டுக்கு ஐந்தாம் ரகத்தை சேர்ந்த சச்சுகட்டு வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. நடுத்தர, மற்ற ரக கட்டு இலை விலை 1,500 ரூபாய் முதல் 2000 வரை செல்கிறது. ரூ.30 முதல் ரூ.50 வரை விற்ற ஒரு கட்டு சச்சுக்கட்டு வாழை இலை தட்டுப்பாட்டால் தற்போது ரூ. 400-க்கு அடிபிடியாக விற்பனையாகிறது.

பிளாஸ்டிக் பேப்பர்

சந்தைகளில் வாழை இலை வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், உணவகங்களில் வாழை இலைக்குப் பதில் முழுக்க முழுக்க தற்போது பிளாஸ்டிக் பேப்பர்களில்தான் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளில் தலைவாழை சாப்பாடு தலைமறைவாகி விட்டது. விருந்தினர்களை உபசரிக்க தலைவாழையில் சாப்பாடு வழங்குவது தமிழர்களுடைய பாரம்பரிய கலாச்சாரமாகக் கருதப்பட்டது.

ஆனால், இன்றோ வறட்சி ஒருபுறம் இருந்தாலும், நாகரிக வளர்ச்சிப் போர்வையில் வீட்டு விசேஷங்களில்கூட பிளாஸ்டிக் தட்டு, பேப்பர்களில் விருந்தோம்பல் வழங்கும் புதுகலாச்சாரம் தொடங்கியுள்ளது.

வாழை இலையில் மருத்துவ குணம்

இதுகுறித்து திண்டுக்கல் ராம்நகரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வனதாசன் ஆர்.ஆர்.ராஜசேகரன் கூறியது: நாகரிக முன்னேற்றத்தால் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய விஷயங்கள் பலவற்றை இன்றைய இளைய தலைமறையினர் தவறவிடுகின்றனர். அதில் ஒன்று வாழை இலையில் சாப்பிடுவது.

வாழை இலை ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். நல்ல கிருமி நாசினியும்கூட. சுடச்சுட சாப்பாட்டை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதனால்தான் தீக்காயம் அடைந்தவர்களைக்கூட வாழை இலையில் படுக்க வைக்கின்றனர். விஷ உணவுகளை வாழை இலையில் பரிமாறினால், அந்த விஷத்தை வாழை இலை முறித்துவிடும்.

கைக்கு அடுத்து, விருந்தோம்பலுக்கு வாழை இலைதான் பாரம்பரியக் கலாச்சாரம். ஆனால் இன்று வறட்சியால் ஒருபுறம் வாழை இலை மாயமானாலும், நாகரீக மோகத்தால் தலைவாழை சாப்பாட்டை மறந்துவிட்டோம். அதனால் சுகாதாரமும், சுற்றுப்புறமும் மாசு அடைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x