

உலகெங்கும் இயற்கை வேளாண் மையை நோக்கி நாள்தோறும் பலர் ஈர்க்கப்படுவதற்கான முதன்மைக் காரணம், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா. அவரால் உத்வேகம் பெற்ற இயற்கை வேளாண் இயக்கம், நம்ம ஊர்வரை வேர் பாய்ச்சியுள்ளது. ஃபுகோகாவைப் போலவே உலகின் மற்ற மூலைகளிலும் வேளாண்மையின் ஆதி வேர்களைத் தேடும் முயற்சிகளை பல அறிஞர்கள் மேற்கொண்டார்கள். அவர்களில் முதன்மையானவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் மோல்லிசன் கடந்த சனிக்கிழமை இயற்கையுடன் கலந்தார்.
டாஸ்மேனியாவைச் சேர்ந்த பில் மோல்லிசனின் பூர்விகப் பெயர் புரூஸ் சார்லஸ். பெர்மாகல்சர் (Permaculture நிரந்தர வேளாண்மை) முறைக் காக உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர் மோல்லிசன். இயற்கையை மறுபிரதி செய்வதன் மூலம், நமக்குத் தேவையானதை காலாகாலத்துக் கும் அதனிடமிருந்து பெறுவது எப்படி என்பதை இந்த முறை மூலமாக அவர் கற்றுத் தந்தார்.
காமன்வெல்த் அறிவியல், தொழிற்சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆஸ்திரேலிய காட்டுயிர் கணக்கெடுப்புப் பிரிவில் 1954-ல் சேர்ந்தது, அவருடைய ஆராய்ச்சி அறிவை விசாலப்படுத்தியது. டாஸ்மேனிய மழைக்காடுகள் அவரிடம் ஏற்படுத்திய புரிதலே, அவருடைய பிற்கால வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்த நிரந்தர வேளாண்மைக்கு வாசல் திறந்துவிட்டது.
1974-ல் டேவிட் ஹோம்க்ரென் உடன் இணைந்து ‘நிரந்தர வேளாண்மை’ என்ற கோட்பாட்டை உருவாக்க ஆரம்பித்தார். இந்தக் கோட்பாடு உலகைப் புதுப்பித்து மீட்கும் என்பதை உணர்ந்த அவர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியை உதறி, நிரந்தர வேளாண்மைக் கோட்பாட்டை முழுமைப்படுத்துவதிலும், அதை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்வதிலும் முனைப்பு காட்டினார்.
மனிதர்களின் உதவியோடு உருவாக்கப்படும் இயற்கை வளம்குன்றாத ஓர் அமைப்புதான் ‘நிரந்தர வேளாண்மை’. இதில் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். மற்ற உயிரினங்கள் செழித்து வளரக்கூடிய வாய்ப் பையும் இந்த அமைப்பு மறுப்பதில்லை. நியூ சவுத் வேல்ஸில் 1979-ல் அவர் தொடங்கிய ‘பெர்மாகல் சர் ஆராய்ச்சி நிறுவனம்’ மண், நீர், தாவரம் ஆகியவற்றை வளம் குன்றாமல் எப்படிக் கையாள்வது என்பதை நடைமுறைரீதியில் கற்றுத்தருகிறது. இயற்கைக்குப் புத்துயிர் ஊட்டும் இந்தச் சுற்றுச்சூழல் வடிவமைப்புப் பணிக்காக 1981-ல் மாற்று நோபல் பரிசு எனப்படும் ‘ரைட் லைவ்லிஹுட் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.
இயற்கை வேளாண்மையின் உச்சமான நிரந்தர வேளாண்மையை முன்மொழிந்த மோல்லிசன் மறைந்துவிட்டது குறித்து கவலைப்படத் தேவை யில்லை. ஏனென்றால், நாம் செல்ல வேண்டிய பாதைக்கான அடித்தளத்தை நன்கு வலுவாகவே அவர் அமைத்துக் கொடுத்துள்ளார். அதில் நாம் செல்ல வேண்டியது மட்டும்தான் பாக்கி.
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in