

தமிழக அரசால் மனையில்லாத 699 பேருக்கு வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாவுக்கு 18 ஆண்டுகளாகியும் நிலம் அளந்து கொடுக்காத அவலநிலை புதுக்கோட்டையில் தொடர்கிறது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வீடு இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு கடந்த 1996-ல் அதிமுக அரசால் 669 பேருக்கு புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. தாங்கள் ஏழை என்பதற்கும், சொந்த வீட்டு மனை இல்லை உள்ளிட்ட ஆவணங்களைச் சேகரித்துக் கொடுத்து அரசிடம் இருந்து பட்டாவைப் பெற்ற நிலையில் அதற்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை.
நீதிமன்றம் தீர்ப்பு…
நாள்கள் மாதங்களானது, ஆண்டுகளானது… ஆனால், தீர்வு கிடைத்தபாடில்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடியதில் மீண்டும் விசாரணை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டுமென கடந்த 2005-ல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவைப் பின்பற்றிய அலுவலர்கள் விசாரணையை மேற்கொண்டதோடு நடவடிக்கையை முடித்துக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2008-ல் பட்டாதாரர்களின் போராட்டத்தின்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வருவாய்த்துறை, காவல் துறை அலுவலர்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மறுவிசாரணையில் 40 பேர் தகுதியற்றவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களைத் தவிர 629 பேருக்கு டிசம்பருக்குள் இடம் அளந்து கொடுக்கப்படுமென உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கொட்டகை அமைத்துக் குடியேறினர்…
அதன்பிறகும் அலுவலர்கள் காலம் தாழ்த்திவந்ததோடு விவரம் கேட்டுச்செல்வோரைத் திட்டி விரட்டிப்பார்களாம். இதனால் நேரில் செல்ல மறுத்த பயனாளிகள் முதல்வர், ஆட்சியரிடம் கோரிக்கையை மனுக்களின் வாயிலாக தெரிவித்தும் பலனில்லை. இதனால் தினந்தோறும் சாப்பாட்டுக்கே அல்லல்படும் நிலையில் நிலத்துக்கான போராட்டம் தொடர்வதால் ஆத்திரம் அடைந்த பயனாளிகள் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டகை அமைத்துக் குடியேறினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அலுவலர்கள் விரைவில் நிலம் அளந்து கொடுக்கப்படுமென உறுதி அளித்ததோடு கொட்டகைகளையும் பிரித்து எடுத்துச்செல்ல வேண்டுமென எச்சரித்துள்ளனர்.
வாக்குறுதியோட சரி…
இதுகுறித்து பயனாளி பழனிவேல் கூறியது: “பட்டா வழங்கியபிறகு ஆட்சி மட்டும்தான் மாறி மாறி வந்ததே தவிர எங்களுக்கு நிலம் கிடைக்கல. தேர்தல் நேரத்துல பட்டா வாங்கித் தருவோமுன்னு ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பாங்க. அதோட சரி. அதுக்கப்புறம் அவுங்களும் கண்டுக்க மாட்டாங்க.
எங்களுக்கு பட்டா கொடுத்த பகுதி கிராவல் மண் நிறைந்த பகுதி. நிலத்தை அளந்து கொடுத்தா கள்ளத்தனமாக மண் அள்ளமுடியாது. வருவாய் இழப்பு ஏற்படுமுன்னு நினைப்பவர்களுக்கு அதிகாரிகளும் துணைபோறாங்க. தொடர்ந்து போராடிக்கிட்டுதான் இருக்கிறோம். எங்களது பிள்ளைக காலத்துலயாவது பட்டா கொடுப்பாங்களான்னு தெரியலை” என்றார்.
முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சின்னத்துரை கூறுகையில், “இப்பிரச்சினை குறித்து மக்களின் கருத்துக்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் லாசர், பாலகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுச் சென்றுள்ளனர். இப்பிரச்சினை சட்டப்பேரவைக் கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன்மூலம் கோரிக்கை நிறைவேறுமென எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதுகுறித்து வட்டாட்சியர் கோவிந்தராஜன் கூறியது: “தற்போதுதான் மாறுதலாகி பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் விசாரித்து பயனாளிகளுக்கு நிலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
எங்களுக்கு பட்டா கொடுத்த பகுதி கிராவல் மண் நிறைந்த பகுதி. நிலத்தை அளந்து கொடுத்தா கள்ளத்தனமாக மண் அள்ளமுடியாது. வருவாய் இழப்பு ஏற்படுமுன்னு நினைப்பவர்களுக்கு அதிகாரிகளும் துணைபோறாங்க.