

பழனி தைப்பூச விழாவில் நகராட்சி சார்பில் அவசர கோலத்தில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் விழா முடிந்த இரு வாரத்திலேயே பாழாகிவிட்டன.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் மற்றும் தைப்பூச விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த விழாக்களையொட்டி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து செல்கின்றனர். சாதாரண நாளில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் பழனி நகருக்கு வந்து செல்கின்றனர்.
அவசரகோலம்
விழா நாள்கள் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பழனி வரும் பக்தர்கள், குடிக்க குடிநீர், அவசரத்துக்குச் செல்ல கழிப்பிட அறைகள், குளியலறைகள், தங்க விடுதிகள் இல்லாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
நகராட்சி சார்பில், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முக்கிய விழா காலங்களில் மட்டும் அவசரகோலத்தில் பக்தர்களுக்கு தேவையான இலவச கழிப்பிட அறைகள், குளியலறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட தற்காலிக விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விழா முடிந்ததும், அவற்றைக் கைவிடுவதால் கட்டப்பட்ட கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் பாழாகிவிடுகின்றன.
தற்காலிக ஏற்பாடுகள்
கடந்த ஜன. 11-ம் தேதி தொடங்கி 10 நாள் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவுக்காக தேவஸ்தானப் பங்களிப்புடன் நகராட்சி நிர்வாகம், நகரின் முக்கிய இடங்களில் ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரக் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு விழா ஏற்பாடுகளை தற்காலிகமாக செய்திருந்தது. தற்போது, அவசரத்துக்காக அமைக்கப்பட்ட கழிப்பிட அறைகள், குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாகிக் கிடக்கின்றன. ஒவ்வொரு விழாவுக்காகவும், நகராட்சி தற்காலிக விழா ஏற்பாடுகளுக்காக செலவிடும் தொகையில், பழனி தேவஸ்தானம் 75 சதவீதத்தை திருப்பி வழங்கிவிடுகிறது.
இந்த வகையில், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் அரசு பணம் தற்காலிக விழா ஏற்பாட்டில் விரயமாகி வருகிறது. அதனால், நகராட்சியும், தேவஸ்தானமும் இணைந்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிரந்தரமாகச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி திருப்பதியாவது எப்போது?
இதுகுறித்து பழனி விஸ்வ ஹிந்து பரிஷத் நகரச் செயலர் தா.செந்தில்குமார் கூறியது: வெளியூர் பக்தர்களுக்கு குளியல் அறை, கழிப்பிட அறை மற்றும் குடிநீர் ஆகியன முக்கிய அடிப்படை தேவை. இவை பழனியில் முற்றிலும் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் தனியார் கழிவறைகள், குளியல் அறைகள் உள்ளன. அவர்கள் குளிக்க ரூ.30, கழிப்பிடம் செல்ல ரூ.10 வசூலிக்கின்றனர்.
சாமானியனால் பழனி கோயிலுக்கு வந்து செல்ல முடியவில்லை. இந்தியாவில் திருப்பதிக்கு அடுத்து இரண்டாவதாக பழனி கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. தேவஸ்தானம் நினைத்தால், நன்கொடையாளர்களைக் கொண்டே, பழனி நகரை மற்றொரு திருப்பதியாக்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக வெறும் பேச்சுக்காக மட்டும் பழனியை திருப்பதியைபோல் மாற்றுவோம் என அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் கூறுகின்றனர். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, பழனி நகரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.