

50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த அரிச்சந்திரா நதியின் முகத்துவாரத்தைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களே ரூ. 10 லட்சம் திரட்டி சீரமைத்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் தலை ஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் தொடங்கி பல கிராமங்கள் வழியாகச் செல்லும் அரிச்சந்திரா நதி, நாலுவேதபதி கிராமத்தின் 55 பாலம் வழியாக கடலில் கலக்கிறது.
அரிச்சந்திரா நதியில் கிடைக்கும் நீரைக் கொண்டுதான் ஆலங்குடி, மணக்குடி, தலைஞாயிறு, தொழுதூர், பழையாற்றான்கரை உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.
பாசன வசதி மட்டுமன்றி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளுக்கும் இதுதான் வடிகால். மேலும், இதன் மூலமாக உள்புகும் கடல்நீரை நம்பி பல நூறு ஏக்கரில் இறால் பண்ணைகளும் இயங்கி வருகின்றன. குறிப்பாக, முதலியப்பன்கண்டியில் 800 ஏக்கர், வெள்ளப்பள்ளத்தில் 300 ஏக்கர் இறால் பண்ணைகள் உள்ளன. மற்றபடி, ஆற்றுப் பாசனம் என்பது பருவமழை காலங்களில் மட்டும்தான்.
இப்படி பல்வேறு விதத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அரிச்சந்திரா நதியின் முகத்துவாரம் முழுவதுமாகத் தூர்ந்து பல ஆண்டுகளாகிறது. ஆற்றையே மறைக்கும் அளவுக்கு சுண்ணாம்புப் பாறைகள் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றின் பயன்பாடு எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே, அரிச்சந்திரா நதியை தூர்வார வேண்டும் என்றும், முகத்துவாரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சியினரிடமும் இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, மக்களே ஒன்றுகூடி களத்தில் இறங்கினர். விவசாயிகள், இறால் பண்ணை உரிமையாளர்கள், ஆற்றைப் பயன்படுத்தும் உள்நாட்டு மீனவர்கள் ஆகிய மூன்று தரப்பின
ரும் ஆளுக்கு கொஞ்சம் நிதியைச் சேர்த்து மொத்தம் ரூ. 10 லட்சத்தைத் திரட்டி, முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்துள்ளனர். சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு மட்டும் ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ளது.
இதற்குமேல் உள்ள பகுதியையாவது அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மக்கள். இந்த ஆற்றை முழுமையாகத் தூர்வாரி, ஆற்றின் இருபுறமும் கரையைப் பலப்படுத்தி சிமென்டால் ஆன தடுப்புச் சுவரை கட்டித் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இது குறித்து விவசாயி பாண்டியன் கூறியது: 50 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த ஆற்றின் முகத்துவாரத்தை மட்டும் நாங்கள் ஒன்றிணைந்து சீரமைத்துள்ளோம். ஆற்றை முழுவதுமாக தூர்வாரிக் கொடுத்தால் வெள்ளக் காலங்களில் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாது. சுமார் 5000 ஏக்கர் இதன் மூலம் பாசன வசதி பெறும். இறால் வளர்ப்போருக்கும் உதவியாக இருக்கும்” என்றார்.
முகத்துவாரம் சீரமைப்பில் வெள்ளப்பள்ளம் இறால் வளர்ப்போர் சங்கத் தலைவர் ஷேக்தாவூது, முதலியப்பன்கண்டி இறால் வளர்ப்போர் சங்கத் தலைவர் செந்தில், விவசாய சங்கத் தலைவர் பாண்டியன், மற்றும் விவசாயிகள் வேலாயுதம், அன்பழகன், மாரியப்பன், பற்குணம் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.