

“மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு படுத்துக்கொண்டிருக்கிறீர்கள்; ‘ஹலோ எப்படி இருக்கீங்க?’ என்று நட்புடன் கேட்டுச் சிரித்துக் கொண்டே ஒரு டாக்டர் உங்களை அணுகுகிறார். அவர் அந்த மருத்துவமனையில் அப்போது டூட்டி பார்க்கும் டாக்டரா அல்லது மேல்வருமானத்துக்காக உங்களுக்குத் தூண்டில் போடும் டாக்டரா என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம், அவர் மேல்வரு மானத்துக்காகத்தான் உங்களுக்கு அப்படி சலாம் போடுகிறார்.
அமெரிக்கா முழுக்கத் தங்களுடைய மருத்துவ பில்களில் ‘திடீரென’ ஏதோ ஒரு கட்டணம் புதிதாக முளைப்பதை எல்லா நோயாளிகளுமே அதிர்ச்சியுடன் கவனித்துவருகின்றனர். அது வேறொன்றுமில்லை: ‘மேல்வருமான மருத்துவம்’தான் அது! வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவர்கள் தங்கள் போக்குக்குப் புதிய கட்டணங்கள் அது இது என்று ஏதேதோ சொல்லிக் கட்டணத்தை அதிகப் படுத்துவதற்குத்தான் இந்தப் பெயர்.
நோயாளிக்குத் தெரிவிக்காமலேயே அறுவைச் சிகிச்சையின்போது இன்னொரு டாக்டரும் சேர்ந்து கொள்கிறார். சில சமயம், சாதாரண நர்ஸ் செய்யக் கூடிய வேலைகளை டாக்டருக்குப் படித்து, பயிற்சி பெற்ற ஒருவர் செய்கிறார். சில இடங்களில் மருத்துவ மனைகளும் இதற்குக் காரணம். நோயாளிகளுக்குத் தேவைப்படாத, தலைமை டாக்டர் பரிந்துரைக்காத சில வேலைகளுக்கு இன்னொரு டாக்டரைப் பணியில் ஈடுபடுத்துகின்றன. இந்த டாக்டர்களில் பெரும் பாலானவர்கள் நோயாளியின் மருத்துவ இன்சூரன்ஸ் வரம்பில் வராதவர்கள். அதாவது, அவர்களின் காப்பீட்டு நிறுவனப் பட்டியலில் உள்ள டாக்டர்களைவிட அதிக சேவைக்கட்டணம் வசூலிப்பார்கள். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஒரு நோயாளிக்கு மருத்துவமனை பில் 1,17,000 டாலர்களுக்கு வந்ததாம். அதை அனுப்பிய டாக்டரை அந்த நோயாளி சிகிச்சை தொடர்பாகச் சந்தித்ததே இல்லையாம்.
இந்தப் பேராசைக்கு எதிராகக் காப்பீட்டு நிறுவனங் களும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களும் போராடி யாக வேண்டும். இல்லையென்றால், மருத்துவக் காப் பீட்டுக்கான பிரீமியக் கட்டணமும் உயர்ந்துவிடும். நியூயார்க்கில் கொண்டுவரப்பட்டுள்ள திடீர் மருத்துவ பில் (தடுப்பு) மசோதாவைப் போல பிற மாகாணங்களும் கொண்டுவர வேண்டும். நல்லவேளையாக இந்தப் பழக்கம் கான்சாஸ் மாகாணத்தில் தொற்றிக்கொள்ளவில்லை. டாக்டர்களின் பேராசைக்கு அணைபோடுவது அமெரிக்க சுகாதாரத் துறையின் முன் உள்ள பெரிய சவால். நுகர்வோர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
THE KANSAS CITY STAR - அமெரிக்கப் பத்திரிகை தலையங்கம்