பழனியில் டோப்பா தொழிற்சாலை அமையுமா?

பழனியில் டோப்பா தொழிற்சாலை அமையுமா?
Updated on
1 min read

பழனி கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை முடியைக் கொண்டு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த "டோப்பா தொழிற்சாலை' அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பழனியில் பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபடுவது பிரசித்தமானது. பிற மாவட்டங்கள், வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்துவரும் பக்தர்கள், பழனியில் முடி காணிக்கை செலுத்துவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.

ரூ. 5 கோடிக்கு ஏலம்

கோயிலில் முடி காணிக்கை செலுத்த பக்தர்களிடம் தேவஸ்தானம் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கிறது. இவற்றில் ரூ.5 கோயில் தேவஸ்தானத்துக்கும், மீதி ரூ.5 முடி எடுக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. பழனிக்கு தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கை முடியை, குடோனில் சேகரித்து, ஆண்டுதோறும் தேவஸ்தானம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுகிறது. கடந்த ஆண்டு ரூ. 5 கோடிக்கு பக்தர்கள் காணிக்கை முடி ஏலம் விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்த முடியை தேவஸ்தானம் ரகம் வாரியாகப் பிரித்து ஏலம் விடுகிறது. இந்த முடியை ஏலம் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அவற்றை பல விதங்களில் உபயோகப்படுத்துகிறது.

அழகு கலைப்பிரிவில் டோப்பா முடி, சவுரி, புருவம், இமை உள்ளிட்ட பல்வேறு அழகு கலைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறது.

ஏலம் எடுக்க போட்டி

கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகுக் கலைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியர்களின் முடிகளை விரும்பி வாங்கி, செயற்கை முடி தயாரிக்கின்றன. இதனால் தனியார் நிறுவனங்கள், பழனி கோயில் முடிகளை போட்டுப் போட்டு ஏலம் எடுக்கிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர் நிறுவனத்தினர் ஏலம் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனி கோயிலில் காணிக்கையாக வழங்கும் முடியைக் கொண்டு, பழனி நகரில் டோப்பா தொழிற்சாலையைத் தொடங்கி தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் என். பாண்டி கூறியதாவது:

கிராமங்களில், "உயிரைக் கொடுத்த கடவுளுக்கு முடியாவது கொடுப்போம்' என சொல்வார்கள். பணக்காரர்கள், இறைவனுக்கு தங்கம், வைரம், பணத்தை காணிக்கையாக வழங்குவர். ஏழைகள் முடியை காணிக்கையாகச் செலுத்துவார்கள். பழனி கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் முடியை வெளிநிறுவனங்களுக்கு டெண்டர் கொடுப்பதை கைவிட்டு, அந்த முடியைக் கொண்டு, தமிழக அரசு பழனியில் டோப்பா தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுத்தால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்து, பழனி நகரம் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in