Last Updated : 27 Feb, 2017 09:19 AM

 

Published : 27 Feb 2017 09:19 AM
Last Updated : 27 Feb 2017 09:19 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: நியாயவிலைக் கடையின் எதிர்காலம் கவலைக்குரியது

நியாயவிலைக் கடைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான செய்திகள் வெளியாவதில்லை என்றாகிவிட்டது. எதிர்காலத்தில் நியாயவிலைக் கடைகள் இருக்குமா என்கிற அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்ட சூழலில், தமிழகக் கூட்டுறவு சங்க ஊழியர் சங்க (பொது விநியோகம்) பொதுச்செயலாளர் இரா.லெனினுடன் ஒரு பேட்டி.

இரண்டு மாதங்களாக உளுந்து, பருப்பு விநியோகமே இல்லையே?

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துவிட்டது. ஒரு கடையில் 1,000 குடும்ப அட்டைகள் உள்ளன என்றால், 60 அட்டைகளுக்குத்தான் சரக்கு அனுப்புகிறார்கள். உளுந்து, பருப்பு, பாமாயில் போன்ற சிறப்பு விநியோகத் திட்டப் பொருட்களைச் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். அதற்கான டெண்டரே நடத்தப்படவில்லை. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இன்றைய தமிழக அரசு சேர்ந்துவிட்டதால், நிலைமை இன்னும் மோசமடையலாம்.

இனி, நியாயவிலைக் கடை என்ற ஒன்றே இருக்காது என்கிறார்களே…

நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கிறபோது, உண்மை என்றே தோன்றுகிறது. அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அட்டைகளைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும்கூட, அரசு அதைக் கட்டாயமாக்குகிறது. ஆதார் அட்டை பதிவுசெய்யாத குடும்ப அட்டைகளுக்குப் பொருட்கள் கிடையாது என்று அறிவித்தனர். அடுத்த கட்டமாக அட்டைதாரர் சொந்த வீட்டில் வசிக்கிறாரா.. இரு சக்கர வாகனம் வைத்துள்ளாரா.. என்பன போன்ற விவரங்களையும் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படலாம். இதனால், பொது விநியோகத் திட்டத்தின் நோக்கமே அடிபட்டுவிடும்.

வசதி படைத்தவர்களும் நியாயவிலைக் கடையில் பொருட்களை வாங்குகிறார்கள்தானே?

அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே சிதைக்கக் கூடாது. எல்லாமே நியாயவிலைக் கடையாக இருந்துவிட்டால், மக்கள் ஏன் இங்கு குவியப்போகிறார்கள்? அத்தியாவசியப் பொருட்களின் விலை வெளிச் சந்தையில் மிக அதிகமாக இருக்கிறது. அரசு முதலில் செய்ய வேண்டியது விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான். அதற்கு, ஊக வணிகத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை நீக்குவதும், உணவு தானியப் பதுக்க.லைத் தடுப்பதுமே தீர்வு.

வாங்காத பொருட்களை வாங்கியதாகக் குறுந்தகவல் வருகிறதே, எப்படி?

ஒரு கடையில் விற்பனையாளர், எடையாளர் என்று இரு ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இரண்டு கடைகளுக்கு ஒரு ஊழியர் என்கிற அளவுக்குத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். வேலைப் பளு, பில் போடும் இயந்திரத்தைக் கையாள்வதில் உள்ள பிரச்சினை போன்றவற்றால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. ஊழியர்கள் செய்கிற தவறுகளுக்கு அதிகாரிகளுக்கும் பங்கிருக்கிறது.

அதிகாரிகளின் தவறு என்று எதைச் சொல்கிறீர்கள்?

குடோனிலிருந்து கடைகளுக்கு வரும்போதே, பொருட்களின் எடை குறைந்துவிடுகிறது. ஆனால், முழு எடைக்கான பணத்தையும் ஊழியர் கட்டியாக வேண்டும் என்கிறார்கள். பிரச்சினை தொடங்குமிடம் இதுதான். அடுத்தது, ஊதிய முரண்பாடு. நேரடியாகப் பொது விநியோகத் துறையின் கீழ் செயல்படும் கடைகளில் விற்பனையாளரின் மாத ஊதியம் ரூ.22,000 என்றால், கூட்டுறவுக் கடையில் அதே ஊழியரின் சம்பளம் வெறும் ரூ. 9,000 தான். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான பயணப்படி வழங்கப்படுவதே இல்லை. சில அதிகாரிகள் பகிரங்கமாகவே ஊழியர்களிடம் பணம் கேட்கிறார்கள். இப்படியான அதிகாரிகளின் செயல்களே, ஊழியர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x