

சமீபத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற 53-வது தேசிய ஓபன் தடகளப் போட்டியில் மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் காயத்ரி.
1996-ல் தடகளத்தில் தடம்பதிக்கத் தொடங்கிய காயத்ரி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி, காமன்வெல்த் இளையோர் விளையாட்டு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய ஜூனியர் தடகளப் போட்டி, ஆசிய கிராண்ட்ப்ரீ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்துள்ளார்.
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் 6 முறை சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்ட காயத்ரி, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், மும்முறைத் தாண்டுதல் ஆகியவற்றில் தேசிய சாதனையை இன்றளவும் தன்வசம் வைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடகளத்தில் கோலோச்சி வரும் காயத்ரி, தனது தடகள சாதனைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அவரின் அடுத்த இலக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வதுதான். அதற்காக இப்போது சென்னை செயின்ட் ஜோசப் அகாதெமியில், பயிற்சியாளர் நாகராஜிடம் தீவிரப் பயிற்சி பெற்று வருகிறார்.