

திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், விபத்தில் சிக்கி உயிரிழப்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. இங்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இருபெரும் விழாக்களாகும். தொடர்ந்து 10 நாள் நடைபெறும் இவ் விழாக்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக செல்வது வழக்கம். சிலர் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தியும், காவடி சுமந்தும் செல்கின்றனர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால், மாலை மற்றும் இரவில் குறிப்பிட்ட நேரம் வரை பாதயாத்திரையை தொடர்கின்றனர். அவர்கள் நடக்கும் பாதை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பதால், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாக அதிகாரி, திண்டுக்கல் ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
பாதுகாப்பு இல்லை
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. வழியில் குடிநீர் வசதி இல்லாததால், பக்தர்கள் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் தண்ணீரை வாங்கிச் செல்கின்றனர். சாலையோர கழிப்பிடங்கள் குறைவால், மறைவிடங்களையே கழிப்பிடங்களாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இயற்கை உபாதைகளுக்காகவும், ஆங்காங்கே சாலையோரங்களில் தங்கும்போதும் சாலைகளை இரவு நேரங்களில் கடக்கும்போது, விபத்துக்கள் ஏற்படுகின்றன.
தவிர்க்கலாம்
விபத்துக்களை தவிர்க்க சமூக ஆர்வலர்கள் சிலர் கூறிய கருத்துகள்:
பக்தர்கள் கட்டாயம் ஒளிரும் குச்சிகளை கைகளில் ஏந்தியோ அல்லது ஒளிரும் சிவப்பு ஸ்டிக்கர்களை பைகளில் ஒட்டிக்கொண்டோ நடக்க வேண்டும். வாகனங்களில் கண்கூசும் வகையில் முகப்பு விளக்குகளை (ஹை பீம்) எரியவிடுவதும், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படாததால் முகப்பு விளக்குகளிலிருந்து நேரடியாக வெளிப்படும் வெளிச்சமும் விபத்து ஏற்படக் காரணமாகிறது. ஆங்காங்கே முதலுதவி மையங்களை ஏற்படுத்தினால், காயமடைபவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.
பழநிக்கு வருடந்தோறும் பக்தர்களால் எத்தனையோ கோடி ரூபாய் வசூலாகிறது. அதில் ஒரு பகுதியை ஆங்காங்கே பக்தர்களின் விழிப்புணர்வு வசதிக்காக செலவழிக்கக்கூடாதா? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.