Last Updated : 06 Jan, 2014 06:14 PM

 

Published : 06 Jan 2014 06:14 PM
Last Updated : 06 Jan 2014 06:14 PM

பாரம்பரியம் காக்கும் மண்பாண்டக் கலைஞர்கள்

மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு நடுவே, பாரம்பரிய முறையை பின்பற்றும் மக்களுக்காக பொங்கல் பானைகளை தயாரித்து, சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதில் கைவினைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்..

திருநெல்வேலி மாவட்டத்தில், ஆற்றுப்படுகைகள், குளங்கள், நீர் ஆதாரங்களில் இருந்து, மண்பாண்டங்கள் தயாரிக்க கைவினைஞர்களால் ஆண்டாண்டு காலமாக களிமண் எடுக்கப்பட்டு வந்தது. களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துதான் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் மண்பாண்டங்களை காயவைக்க முடியாததால், தொழிலும் பாதிக்கப்படும்.

60 யூனிட் இலவசம்

குடிசைத் தொழிலாக மண்பாண்டங்களை தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு, கடந்த காலங்களில் குளங்களில் இருந்து ஆண்டுக்கு 60 யூனிட் களிமண் இலவசமாக எடுக்க கனிமவளத்துறை உரிமம் வழங்கியது. ஆனால், அண்மைக் காலமாக களிமண் எடுக்க அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அட்டைகள் பெற்றவர்களும் பெரும் சிரமத்துக்கு இடையில் களிமண்ணை அள்ளி வந்து, மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பிரச்சினைகளால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை கைவிட்டு, பலர் வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர்.

இத்தகைய சூழலில் இவ்வாண்டு பொங்கலுக்கான பானைகளை, பெருத்த சிரமங்களுக்கு இடையே கைவினைஞர்கள் உருவாக்கி, சந்தைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

வித விதமான பானைகள்

திருநெல்வேலி பேட்டை, மைலபுரத்தில் வசிக்கும் கைவினைஞர்கள் ஆண்டாண்டு காலமாக பானை, அடுப்புகள், கார்த்திகை தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்ப கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்களை தயாரிக்கிறார்கள். இவர்கள், அருகிலுள்ள திருப்பணிகரிசல் குளத்திலிருந்து களிமண்ணை எடுத்துவந்து, தொழில் செய்து வந்தனர். இப்போது, சைக்கிளில்கூட மணல் அள்ளி எடுத்துவர முடியாத அளவுக்கு, அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக கைவினைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த நெருக்கடியிலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு விதவிதமான பானைகள், அடுப்புகளை கடந்த 2 மாதத்துக்கு மேலாகவே தயாரித்து வருகிறார்கள். மழை இல்லாமல் தொடர்ச்சியாக வெயில் இருப்பதால், பானைகளை காயவைப்பதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

பொன்னுக்கு சமம்

கிராமங்களில் முன்பெல்லாம், பொங்கல் பண்டிகையின் போது அளிக்கப்படும், சீர்வரிசையில் விதைநெல் பானைகள் முக்கிய இடம்பிடித்திருக்கும். அவ்வாறு சீர் வரிசைக்காக அளிக்கப்படும் பெரிய அளவு பானைகளில் விதை நெல்லை இருப்பில் வைத்து சாகுபடிக்கு பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது.

அந்தப்பானை பொன்னுக்கு சமமாக கருதப்பட்டு வந்தது. இப்போது படிப்படியாக விதை நெல் பானையை சீர்வரிசையாக அளிப்பது குறைந்து விட்டது. ஒரு சில கிராமங்களில் இந்த வழக்கம் இப்போது இருக்கிறது. இதனால், அத்தகைய பானைகளை தயாரித்து வருவதாக கைவினைஞர் எம்.சோமசுந்தரம் வடிவேல் தெரிவித்தார்.

“பொங்கலையொட்டி, திருநெல்வேலியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் பானைகள், அடுப்புகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மணல் தட்டுப்பாடு என்ற நெருக்கடியிலும் இத்தொழிலை நாங்கள் செய்துவருகிறோம்” என்றார் அவர்.

பொங்கலுக்கான சீர்வரிசை பானை ஒன்று ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண பானைகள் ரகத்துக்கு தகுந்தாற்போல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. பொங்கல் அடுப்பு ஒன்று ரூ. 50-க்கும், அடுப்பு கூட்டி பானையை வைக்க பயன்படுத்தப்படும் 3 கட்டிகள் ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x