

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ராயண்டபுரம் கிராமத்தில் இடம் தயாராக இருந்தும் ஆரம்ப சுகாதார நிலையம் வரவில்லை என்று அந்த கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது ராயண்டபுரம் ஊராட்சி. அரசு பள்ளி தரம் உயர்வு, அரசு பேருந்து போக்குவரத்து, சாலை வசதி, குடிநீர் வசதி, செழிப்பான விவசாயம் என்று அனைத்து வசதிகள் இருந்தபோதிலும், இவர்களுக்கு தலைமுறை,தலைமுறையாக முக்கிய பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சாதாரண காய்ச்சலில் தொடங்கி உயிருக்கு ஆபத்து என்ற நிலை இருந்தாலும் மருத்துவ வசதி பெற 8 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். ராயண்டபுரத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு வந்தால்தான் சிகிச்சை கிடைக்கும். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களில் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.
ராயண்டபுரத்துக்கு அரசு மருத்துவமனை (ஆரம்ப சுகாதார நிலையம்) வேண்டும் என்பதற்காக, அந்த கிராம மக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ராயண்டபுரம் - விஜயப்பனூர் கூட்டு சாலை அருகே புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத் துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும், புறம்போக்கு நிலத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களையும் விவசாயிகள் தானமாக கொடுத்துள்ளனர். இவ்வாறு, மருத்துவமனைக்காக 5 ஏக்கர் நிலம் சேர்ந்துள்ளது என்கின்றனர்.
மருத்துவமனை கொண்டு வருவதற்கு இடம் தயாராக இருந்தாலும் 30 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ளது என்று காரணங்களை கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராம மக்களின் முயற்சி தொடர்கிறது. ஆட்சியில் இருந்த தி.மு.க. மற்றும் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை சந்திந்து மனு கொடுத்து வருகின்றனர். மேலும், ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறைக்கும் மனு கொடுத்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக, மக்களின் விடாமுயற்சி தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘ராயண்டபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை கொண்டு வர முயற்சித்து வருகின்றோம். சுதந்திர இந்தியாவுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு இடம் வழங்கியும் அதிகாரிகள் தட்டி கழித்து வருகின்றனர். மக்கள் தொகை குறைவு என்று காரணம் கூறுகின்றனர். 8 கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் நடைபெறுகிறது. அதனைத் தடுக்க மருத்துவ வசதி அவசியம் தேவை. இதனை நிறைவேற்றி தர ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் முன் வேண்டும் என்றனர்.
தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன் கூறுகையில், ‘‘ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக இடம் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் ஆட்சியருக்கு கோரிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெயந்தி கூறுகையில், ‘ராயண்டபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’என்றார்.