திண்டுக்கல்: “பினாமி” பெயரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் டெண்டர்

திண்டுக்கல்: “பினாமி” பெயரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் டெண்டர்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் தங்கள் உறவினர்கள், பினாமிகள் பெயரில் டெண்டர் எடுத்து பணிகள் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்பு, உளவுத் துறை போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் பதவி விரைவில் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நான்கு நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 24 பேரூராட்சிகள், 306 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மானியத் திட்டங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில், தனியார் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பணிகளை உள்ளாட்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக உள்ளாட்சி விதிமுறைப்படி உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த விதமான வரவு, செலவு சம்பந்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள், சந்தை மற்றும் பஸ் நிலையக் கடைகளை டெண்டர் எடுக்கக் கூடாது எனவும், விதிமுறை மீறி டெண்டர் எடுக்கும் உள்ளாட்சிப் பிரநிதிகளின் பதவிகளைப் பறிக்க சட்டத்தில் அதிகாரம் உள்ளது.

இந் நிலையில், சமீப காலமாக முறையான கண்காணிப்பு, நடவடிக்கை இல்லாததால் விதிகளை மீறி திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் தங்கள் உறவினர்கள், பினாமிகள் பெயரில் உள்ளாட்சிப் பணிகளை டெண்டர் எடுத்து மேற்கொள்வதாகவும், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் பகிரங்கப் புகார் எழுந்துள்ளது.அதனால், உள்ளாட்சிப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளே டெண்டர் எடுப்பதால் அப்பணிகள் தரம் இன்றி லாபநோக்கில் கண்துடைப்பு நடவடிக்கையாக மேலோட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக சாலை அமைப்பது, குடிநீர் பணிகள், குளங்கள், ஏரிகள் தூர்வாருதல், சாக்கடை கால்வாய் பணி, பஸ் நிலையம், சந்தை கடைகள் மற்றும் வரி வசூல் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்துப் பணிகளையும், வருவாய் இனங்களையும் உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் கட்சி பாரபட்சம் இன்றி கூட்டணி அமைத்து "பினாமி” மற்றும் உறவினர்கள் பெயரில் டெண்டர் எடுத்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில், தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு, உளவுத் துறை போலீஸார் உள்ளாட்சி அமைப்புகளில் உறவினர், பினாமி பெயரில் டெண்டர் எடுத்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதனால், உறவினர்கள், "பினாமி”கள் பெயரில் டெண்டர் எடுத்த திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in