

நல்ல பாம்பு உண்மையிலேயே நல்ல பாம்புதான். நம்மை பயமுறுத்தவே அது படமெடுக்கிறது. இதற்காக யாரும் பயப்பட வேண்டாம் என்கிறார் பாம்பு பிடிப்பதற்காக பயிற்சியளித்து வரும் மணிமேகலை (27).
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. பாம்புகளைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், காணும் இடங்களிலெல்லாம் பாம்புகளை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் இவர் ஒப்படைத்து வருகிறார்.
அவர் கூறியது: நான் சிறு வயது முதலே டிஸ்கவரி சேனல் பார்ப்பதிலேயே அதிக நேரங்களைச் செலவிடுவேன். இந்நிலையில், எனக்கு பாம்புகளை பிடிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது.
இதை என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், பத்தாம் வகுப்பு முடித்ததும் உதகையில் இயங்கிவரும் தமிழ்நாடு பசுமை இயக்கத்தில் வனவிலங்குகள் குறித்து பயிற்சி பெற்றேன். அதில்தான், பாம்புகளைப் பிடிக்க கற்றுக்கொண்டேன். தற்போது 5 ஆண்டுகளாக பாம்புகளைப் பிடித்து வருகிறேன்.
தமிழகத்தில் 65 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை, நல்ல பாம்பு ஆகியவை மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. பிற பாம்புகள் எல்லாம் விஷத்தன்மை அற்றவை. அந்த பாம்புகள் கடித்தாலும் விஷம் கிடையாது.
மேலும், நல்ல பாம்பு உண்மையிலேயே நல்லபாம்பு தான். அது யாரையும் கடிக்க நினைப்பதில்லை. நாம் தாக்குவோம் என நினைத்துதான் நம்மை பயமுறுத்தவே அவை படமெடுக்கின்றன. பிறரிடமிருந்து தன்னைப் பாதுகாக்கவே அவை நம்மை கடிக்கின்றன.
இதை நாம் தவறாக நினைத்துக் கொண்டு அவற்றை அடித்துக் கொல்கிறோம். பாம்பு நம்மை கடித்தால் உடனடியாக கடித்த இடத்தின் மேலும், கீழும் ரப்பரால் கட்ட வேண்டும். எந்த காரணம் கொண்டும் பாம்பு கடித்த இடத்தை பிளேடால் கீறக்கூடாது. பாம்பு கடியால் ஏற்கெனவே சோர்வாக இருக்கும் நபர் பிளேடால் கீறுவதால் மேலும், உடல் ரீதியாக பலவீனம் அடைந்து விடுவார். எனவே, அவரை உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். மேலும், பாம்புகள் பால் குடிக்கவே குடிக்காது என்றார்.
இவர் மதுரையில் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகம் என்ற பெயரில் பாம்புகளுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். இதில், விஜயலட்சுமி என்ற இளையான்குடி அரசு மருத்துவமனை செவிலியர், நாகலட்சுமி என்ற கல்லூரி மாணவி, செல்வகுமாரி ஆகிய 3 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
விவசாயத்துக்கு பாம்புகள் மிகவும் பயன்படுகின்றன. ஆனால், பாம்புகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
எனவே, பாம்புகளை கண்டால் 9688071822 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொண்டால் உடனே அந்த இடத்திற்கு வந்து பாம்புகளை பிடித்து சென்று உரிய இடத்தில் ஒப்படைப்பதாக கூறுகிறார். மேலும், வருங்காலத்தில் வனவிலங்கு அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து பல்வேறு வகையான வனவிலங்குகளை பாதுகாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.