Last Updated : 23 Dec, 2013 12:00 AM

Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

ஆதார் அட்டை: தீராத குழப்பமும் குளறுபடிகளும்

ஆதார் அட்டை விநியோகப் பணிகள் வரும் 31-ம் தேதி முடிவடைகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டை பெறாமலும் அதற்கு பதிவு செய்யாமலும் உள்ளனர். சரியான தகவல் இல்லாதது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களால் ஆதார் அட்டை வழங்கும் பணியில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் தகுதியுடைய அனைவருக்கும் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டைகள் கொடுத்து முடிக்கப்படும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. 2010-ம் ஆண்டு நடந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணியை (என்.பி.ஆர்.) அடிப்படையாகக் கொண்டே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அப்போது இதை பெரிய விஷயமாக கருதாத மக்கள், அலட்சியமாக இருந்து விட்டனர்.

ஆதார் அட்டைக்கு என்.பி.ஆர். பதிவு அவசியம் என்பது பிறகுதான் தெரியவந்தது. இதனால், பதிவு செய்யாத பல லட்சம் பேர் பெரும் குழப்பம் அடைந்தனர். அவர்களுக்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகத்தில் மனு தருவதாக அறிவித்தனர். அந்த மனுக்கள் கிடைப்பதே இல்லை என்கின்றனர் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்தவர்களை படம் எடுப்பதற்காக மாநகராட்சியும் வருவாய்த் துறையினரும் முகாம்களை நடத்தின. எந்த இடத்தில் எப்போது முகாம் நடக்கும் என்ற தகவல் தெரியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

என்.பி.ஆர். பதிவுக்குப் பிறகு, வேறு முகவரி மாறியவர்களுக்கு புகைப்படும் எடுப்பது பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடு மாறும் நிலை உள்ளது. அவர்களது ரேஷன் அட்டையில் ஒரு முகவரியும், வாக்காளர் அடையாள அட்டையில் வேறொரு முகவரியும் இருக்கிறது. அவர்கள் எங்கு தங்கள் ஆதார் அட்டையை வாங்க வேண்டும் என்பது தெளிவாக கூறப்படவில்லை.

சென்னையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதிகம். அவர்களில் பலர் வேலை மற்றும் கல்விக்காக இடம் மாறுவதும் அதிகமாக நடக்கிறது. இதனால்தான் சென்னையில் மிகக் குறைந்த அளவில், வெறும் 50 முதல் 65 சதவீத மக்களே ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நங்கநல்லூர் குடியிருப்போர் நலச்சங்க முன்னாள் தலைவர் ராகவன் கூறுகையில், “மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக நங்கநல்லூர், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் போன்ற இடங்களில் வசிப்பவர்கள், தங்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கவில்லை. 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களின் பெயர்களை, தற்போது நடந்து கொண்டிருக்கும் முகாம்களிலேயே சேர்க்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களிடம் இருக்கும் சமீபத்திய முகவரி சான்றை வைத்து ஆதார் அட்டையை அருகில் இருக்கும் மாநகராட்சி அல்லது வார்டு அலுவலகத்தில் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்றார்.

சென்னை மாநகராட்சி தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், பழைய வார்டுகள் அடிப்படையிலேயே ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால், எங்கே தங்கள் கார்டுகளை வாங்க வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதுபற்றி அயனாவரத்தில் வசிக்கும் தேவி கூறுகையில், “ஆதார் அட்டை வாங்க பழைய வார்டு அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமா அல்லது புது வார்டு அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமா என்பது தெரியவில்லை” என்றார்.

ஆதார் அட்டை பதிவு செய்யும் பணி தனியார் ஒப்பந்ததாரர்களிடம் தரப்பட்டுள்ளது. அவர்கள் போதிய எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால், ஆதார் முகாம் நடத்துவதில் சுணக்கம் ஏற்படுள்ளது.

அவர்களுக்கு முறையான பயிற்சி தராததால் பல இடங்களில் குளறுபடிகள் நடந்தன. சில இடங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் தராததாலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் பணிகள் தாமதம் ஆவதற்குக் காரணம் என்கிறார்கள்.கட்டாயப்படுத்தக் கூடாது

அகில இந்திய நுகர்வோர் அமைப்பான அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினர் எம்.கே.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பெறவும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வலியுறுத்தியும் குறுந்தகவல் அனுப்புவதோ அல்லது அறிவிப்பு பலகைகளை வைப்பதோ இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. மானியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வரும்வரை மானியங்களை அளிப்பதற்கு அட்டை கட்டாயம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் எரிவாயு இணைப்பையும் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x