Published : 04 Jan 2014 20:22 pm

Updated : 06 Jun 2017 17:33 pm

 

Published : 04 Jan 2014 08:22 PM
Last Updated : 06 Jun 2017 05:33 PM

நம்மாழ்வாரை மறக்காத கன்னியாகுமரி

நம்மாழ்வார்... இந்திய விவசாயத்தின் ஒடிந்து போன முதுகெலும்பை ஒட்ட வைக்க, ஓய்வறியாது ஓடி உழைத்த பெரியவர்.

“இந்த மண்ணு இயற்கையாவே சத்தானதுதான். அது பாட்டுக்கு அதை விட்டுட்டோமுன்னா, நல்ல மகசூலா கொடுக்கும். அதைப் போயி ரசாயன உரம், பூச்சி மருந்துன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. இயற்கையான மாட்டுச் சாணியே போதும். நம்ம பாட்டன், முப்பாட்டன் காலத்துலயெல்லாம் இந்த ரசாயன உரமெல்லாம் இல்லீல்லா” என்று, வெள்ளந்தியாக மேல் சட்டை அணியாமல், விவசாயிகளுக்கு வகுப்பெடுக்கும் நம்மாழ்வாரை, இனி என்று காண்போம்? என, கண்ணீரில் மிதக்கிறார்கள் கன்னியாகுமரி விவசாயிகள்.


நாகர்கோவில் நகர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் நம்மாழ்வார் சிரிக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கனத்த மனதோடு கண்ணீரில் கரைந்து போகிறார்கள் விவசாயிகள். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார் (75). அவர் மீது, கன்னியாகுமரி விவசாயிகளுக்கு ஏன் அத்தனைப் பரிவு?

வாழ்நாளின் கடைசி மூச்சு வரை இயற்கை வழி வேளாண்மை குறித்த பரப்புரையில் ஈடுபட்ட நம்மாழ்வார், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல முறை வருகை தந்திருக்கிறார். அதனால் மாவட்ட விவசாயத்தில் ஆக்கப்பூர்வமான பல பணிகளும் நடைபெற்றன.

`கிரியேட்’ அமைப்பின் பொன்னம் பலம் கூறும் போது:

கேரள மாநிலம், கும்பளங்கி பகுதியில் நெல் குறித்த கருத்தரங்கு ஒன்னு நடந்துச்சு. அப்போதான் முதன் முதலா நம்மாழ்வாரை பார்த்தேன். இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் 57 அமைப்புகளைச் சேந்தவர்கள் கலந்து கொண்டனர். நெல்லின் பாரம்பரியத்தைக் காக்க ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டியதன் அவசியத்தை நம்மாழ்வார் எடுத்துச் சொன்னார்.

முதலாவதாக குமரியில்

அதன் அடிப்படையில், `நமது நெல்லை காப்போம்’ அமைப்பு, முதன் முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் துவங்கப்பட்டது. இங்கிருந்து நம்மாழ்வாரின் முயற்சியால் துவங்கப்பட்ட `நமது நெல்லை காப்போம்’ அமைப்பு, இன்று கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா என பல மாநிலங்களிலும் வேர் விட்டிருக்கிறது. நம்மாழ்வாரின் முயற்சியால், குமரி மாவட்டத்தில் இருந்து அதிகமான பாரம்பர்ய ரகங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 60 நாளில் விளைச்சலைத் தருகிற அறுபதாம் குறுவை கூட இங்கிருந்து தான் மீட்கப்பட்டது, என்றார்.

இடலாக்குடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முஸ்தபா:

குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிக அளவில் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. ஒரு முறை கன்னியாகுமரி வந்திருந்த நம்மாழ்வாரிடம் இதை சுட்டிக் காட்டினோம். உடனே, அதற்காக நாகர்கோவிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். நாகர்கோவிலில் உண்ணாவிரதம்

நாகர்கோவிலில் ராஜேந்திர ரத்னு ஆட்சியராக இருந்த போது, நம்மாழ்வாரை அழைத்து வந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தார். அதன் பின்பு தமிழகத்திலேயே முதல் முறையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் காலையில் இயற்கை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டமும், மாலையில் ரசாயன விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வந்தது. அப்போது இயற்கை விவசாய குறைதீர் கூட்டத்திலும் நம்மாழ்வாரே விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தார். தொடர்ந்து விவசாயிகளுடனே தங்கி இருந்து இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.

விவசாயி கண்ணீர்

குளங்களை காக்கவும் குமரி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து அவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில் அதிகமான பேர் இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். சந்தேகம் ஏற்படும் பொழுதெல்லாம் எங்களை மாணவனாய் பாவித்து கற்ற்த் தருவாரே... இன்னும் கொஞ்சம் வருஷமாச்சும் இருந்திருக்கலாமே… என கண்ணீர் துடைக்கும் முஸ்தபாவுக்கு வயது 80.

வாசலில் புகைப்படம்

உலகம் செல்கிற வேகத்தில், பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் மூழ்கி, பாரம்பர்யத்தை தொலைத்து விட்டதை நம்மாழ்வார் வீதியெங்கும் சென்று விதைத்ததன் விடை, நாகர்கோவிலில் இரு இயற்கை அங்காடிகளும், இயற்கை ஹோட்டலும் முளைத்திருக்கிறது. இரண்டும் நம்மாழ்வாரால் திறந்து வைக்கப்பட்டவை. இரண்டிலும் வாசலில் வரவேற்கும் நம்மாழ்வார் புகைப்படத்திற்கு பூ போட்டு வைத்திருந்தார்கள்.

இப்போதைய சிந்தனையில் ஒரே விஷயம் நம்மாழ்வாரின் உடல் மட்டுமே புதைக்கப்பட்டிருக்கிறது. அவரது கருத்துக்கள் லட்சோப லட்சம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சி பாதையில் வடகரை!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது வடகரை கிராமம்.இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் வடகரையில் இப்போதும் விவசாயம் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் நம்மாழ்வார் தான். இப்பகுதி மக்களை துவக்க காலத்தில் பொருளாதார ரீதியில் மேம்படுத்த பட்டுப்புழு வளர்ப்பை நம்மாழ்வார் தான் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில், வடகரை மக்கள் பட்டுப்புழுவுக்கு பயந்து நடுங்கியிருக்கிறார்கள்.

ஒரு நாள் நம்மாழ்வார் வடகரைக்கு போயிருக்கிறார். அங்கிருந்த ஒருவரைக் கூப்பிட்டு, என் பாக்கெட்டில் கை விட்டு பாருன்னு சொல்லியிருக்கிறார். பாக்கெட்டில் பட்டுப்புழுவை போட்டு கொண்டு வந்திருந்தார் நம்மாழ்வார். என் பாக்கெட்டில் வைச்சுருந்தேனே… கடிக்கவா செஞ்சுச்சு? என கேட்டு, பட்டுப் புழு வளர்ப்பை தூண்டி விட்டார். இந்த ஊரில் உள்ள இளவட்டங்கள் பாதிப் பேருக்கு பெயர் சூட்டியதே நம்மாழ்வார்தான்.நம்மாழ்வார்கண்ணீர் அஞ்சலிநாகர்கோவில் விவசாயிகள்கன்னியாகுமரிஇயற்கை விவசாயம்வேளாண்மைவடகரை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x