

ஆபரணங்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. ஆனால், அதிலும் ஆடம்பரம் இல்லாமல், மருத்துவக் குணங்களுடன் இயற்கையின் உருவாய் ஏராளமானவை உள்ளன. அதில் முக்கியமானது நெற்பவளம். இயற்கையாகவே பாசி மணிபோல அமைந்த இந்த நெற்பவளம், மத ரீதியாக அனைவரிடமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
அமைதியின் திருவுருவம், அர்ப்பணிப்பின் மறு வடிவம் என போற்றப்படும் அன்னை தெரசாவும், உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் ஆண்டவரும் தனது கையில் ஜெபமாலையாக வைத்திருப்பது இந்த விதை மாலையைத்தான். கிறிஸ்தவ மதத்தில் இந்த விதைக்கு யோபுவின் கண்ணீர் என்று பெயர்.
கண்ணீர்த் துளியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த விதையை தேவனுடைய சோதனைகளை ஏற்றுக் கொண்ட யோபுவின் கண்ணீராக ஒப்பிடுகின்றனர் கிறிஸ்தவர்கள். சமஸ்கிருதத்தில் வைஜந்தி என்றும், தமிழில் நெற்பவளம் என்றும், முஸ்லிம்களிடம் தஸ்பிஹ்மணி என்றும் பெயர் பெற்றது இந்த விதை. தமிழகத்தின் பல பகுதியில் இதை பூனாச்சி மணிக் கொட்டை என்கின்றனர்.
கடவுள் ஒன்று, அதை வழிபடும் விதங்கள் வேறு என்பது போல, இந்த பிரார்த்தனை பொருள் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்படுகிறது.
இயற்கையுடன் இயைந்த பிரார்த்தனைக்கான பொருளாக இது கருதப்படுகிறது. பொதுவாகவே, ஆபரணங்கள் என்றால் ஆரம்ப காலத்தில் பாசி மணிகள், எலும்புகள், கடற்பாசிகள், விலை உயர்ந்த கற்கள் எனத் துவங்கி, தங்கம், வெள்ளி என உலோக காலமாக மாறியுள்ளது. ஆனால், இயற்கையாகவே முத்துப் போல உருவாகும் இந்த விதையில் ஏராளமான மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் உலகம் கூறுகிறது.
கோவை அருகே இந்த விதையை தங்கள் வீடுகளில் விளைவித்து, ஆபரணங்களை தயாரித்து வரும் சகாயமேரி, ஜெசி ஆலிஸ் மற்றும் ராணி ஆகியோர் கூறுகையில், உலோகம், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் ஆபரணங்களுக்கு அச்சில் வார்த்து, துளையிட்டு, கோர்க்க வேண்டிய பல வேலைகள் உள்ளன. ஆனால், சோளக் கதிர் போல வளர்ந்து நிற்கும் இந்தச் செடியில் தானாக முளைக்கும் விதைதான் இந்த யோபுவின் கண்ணீர். இதை துளையிடத் தேவையில்லை.
இயற்கையாகவே முத்துப்போல இருப்பதால் எளிதில் பாசிமாலையாகக் கோர்க்கலாம். உலகில் பல மதத்தினரும் இந்த மாலையை ஆன்மிக அடையாளமாக அணிந்துள்ளனர். இன்னும் பல நாடுகளில் இந்த விதைகளை உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். ரொட்டி தயாரிப்பு, சூப், தேனீர், மதுவகைகள் தயாரிக்கவும் இந்த விதை பயன்படுகிறது. இந்த தாவரத்தை வளர்க்க செலவு எதுவுமே இல்லை. ஒரு முறை விதை விழுந்தால், அங்கு தானாகவே முளைத்துக் கொள்ளும்.
ஆபரணங்களுக்காக மூலப் பொருள் வாங்கி, அதில் விதைகளை கோர்த்து, ஏராளமான புதுவித ஆபரணங்களை உருவாக்கியுள்ளோம். மதம், இயற்கை, மருத்துவம், அழகு என ஒன்றுக்கொன்று குறையாத பல நல்ல தன்மையுடைய இந்த இயற்கை அணிகலனுக்கு நல்ல வரவேற்பு நிலவுகிறது என்றனர். இதிலாவது சமத்துவம் நிலைக்கட்டும்.